சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்றக்கோரி, நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க மேலும் 4 வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆர்.பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “சாதி, மதமற்றவர் என சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், அப்போதைய அரசுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாததால், அந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது; தற்போது அதுபோன்ற சூழல் இல்லை என்பதால், சாதி, மதமற்றவர் என சான்றிதழ் கோருபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இதுதொடர்பாக பிரத்யேகமாக சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோர் நீதிமன்றத்தையே நாட வேண்டியிருப்பதால், இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும் எனக்கோரி அருண்குமார் என்பவர் தரப்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதையேற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கெனவே இந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இடையீட்டு மனு எதுவும் தேவையில்லை எனக்கூறி பார்த்திபன் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க மேலும் 4 வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.