தமிழ் சினிமா

‘பரிமளா அண்ட் கோ’ உருவானது எப்படி? - இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘பரிமளா & கோ’. இதில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி மாஸ்டர், அனந்திகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 

இதில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது: “இப்படத்தின் கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு ‘பரிமளா ஃபேமிலி’ என்ற தலைப்பு வைத்திருந்தோம். பிறகு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தலைப்புகள் வந்ததால் மாற்றலாமா என்று யோசித்தோம். ‘பரிமளா அண்ட் கோ’ என்று வைத்தால் எப்படி இருக்கும் என்று வீட்டில் மனைவி, பிள்ளைகளிடம் கேட்டேன். அவர்கள் இருவரும் இதற்கே ஓட்டு போட்டார்கள். 

ஜெயராம், ஊர்வசி இருவரும் இந்த கதைக்குள் வந்ததும், படம் பாதி வெற்றி அடைந்துவிட்டது என்று நினைத்தேன். அவர்கள் இருவரும் கதை கேட்டபோது தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார்கள். ஜெயராம் உடனே ‘இது கண்டிப்பாக பெரிய ஹிட் ஆகும்’ என்றார். அந்த அளவுக்கு அனுபவம் உள்ள இரண்டு கலைஞர்கள் அப்படிச் சொன்னதும் எனக்கு இன்னும் நம்பிக்கை கிடைத்தது.

ஜெயராம், ஊர்வசி இருவருக்கும் நான் மிகவும் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக ஊர்வசி ஒரு தனிப்பட்ட துயரம் நடந்திருக்கும் நேரத்திலும், “ஷூட்டிங்கை நிறுத்த வேண்டாம், நான் வந்து முடித்துவிடுகிறேன்” என்று மறுநாளே வந்து நடித்தார். அது எங்களுக்கு மிகப்பெரிய பலம். அந்த மனநிலையில் கூட அவர் நகைச்சுவை காட்சிகளை அற்புதமாக செய்தார். இன்று வரை அந்த காட்சிகள் பார்க்கும்போதும் நாங்கள் சிரிக்கிறோம்.

மிஷ்கினுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. கடந்த சில நாட்களாக புரோமோஷனுக்காக எல்லா இடங்களுக்கும் என்னுடன் வருகிறார். நான் போகும் இடமெல்லாம் பின்னாலேயே வருகிறார். “படத்துக்காக வருகிறேன்” என்று சொல்வார். அது எனக்கு மிகப்பெரிய அன்பு. ஜெயராமும் இந்த படத்தை ஒரு பெரிய வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் எப்போதும் படத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். என் முழு குழுவும் அதே உற்சாகத்தோடு வேலை செய்தது” இவ்வாறு பாண்டிராஜ் பேசினார். 

SCROLL FOR NEXT