‘த்ருஷ்யம் 3’ விமர்சனம் - மீண்டும் கிட்டியதா இருக்கை நுனி அனுபவம்?

‘த்ருஷ்யம் 3’ விமர்சனம் - மீண்டும் கிட்டியதா இருக்கை நுனி அனுபவம்?
Updated on
3 min read

தனது குடும்பத்தைக் காக்க எப்பேர்ப்பட்ட சாகசங்களையும் மதிநுட்பங்களையும் ஜார்ஜ்குட்டி பயன்படுத்துவார் என்பதைக் காட்டின ‘த்ருஷ்யம்’ முதல், இரண்டாம் பாகங்கள். மிகச் சாதாரணமாக நம்மைக் கடந்து போகும் காட்சிகளைத் தொடக்கத்தில் காட்டிவிட்டு, பின்னர் அவற்றில் சொல்லாமல்விட்ட விஷயங்களைத் திரையில் நம் பார்வைக்கு வைத்திருப்பார் இயக்குனர் ஜீத்து ஜோசப். அதுவே அப்படங்களை ரசிகர்கள் ரசித்துக் கொண்டாடக் காரணம். தற்போது வெளியாகியிருக்கும் ‘த்ருஷ்யம் 3’யும் அந்த வரிசையில் அமைந்திருக்கிறதா?

தொடரும் சஞ்சலம்

வருண் பிரபாகர் எனும் பதின்ம வயது இளைஞன், ஜார்ஜ்குட்டியின் மகள் அஞ்சுவைத் தவறான எண்ணத்தோடு தேடி வந்து கொலையாவதையும், காணாமல்போன தங்களது மகனை ஐஜி கீதாவும் அவரது கணவர் பிரபாகரனும் தேடியலைந்து இறுதியாக ஜார்ஜ்குட்டி குடும்பத்தினரைச் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவருவதையும் அதன் பின்விளைவுகளையும் காட்டியது ‘த்ருஷ்யம்’.

இரண்டாம் பாகமோ, மறைக்கப்பட்ட வருண் சடலம் என்னவானது என்பதைச் சொல்லியிருக்கும். அதற்கு நடுவே, ஊராரால் ஜார்ஜின் குடும்பம் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும் குற்றமுள்ள நெஞ்சோடு குறுகுறுத்தவாறே ஒவ்வொரு நொடியையும் அக்குடும்பம் கடப்பதும் திரைக்கதையில் புகுத்தப்பட்டிருக்கும். வருண் கொலையானதற்கான சான்றுகள் கிடைத்ததா, இல்லையா என்ற கேள்விக்கான பதில் அதன் முடிவில் சொல்லப்பட்டிருக்கும்.

இவ்விரண்டு திரைப்படங்களிலும் ஜார்ஜ் குட்டி தனது குடும்பத்தைக் காக்கச் செய்யும் குயுக்திகளால் சில மனிதர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். அவர்களது பகை முற்றினால் என்னவாகும் என்கிறது மூன்றாம் பாகம்.

ஒரு தயாரிப்பாளராகக் களமிறங்கி, தன் மீது ஊடக வெளிச்சம் விழக் காரணமான விஷயங்களையே ஒரு கதையாக்கி, அதனை ‘த்ருஷ்யம்’ என்ற பெயரில் திரைக்குக் கொணர்கிறார் ஜார்ஜ் குட்டி. அதற்கு அபார வரவேற்பு கிடைக்கிறது. அதே நேரத்தில், ‘இது உங்க குடும்பத்துல நிகழ்ந்த உண்மைச் சம்பவமா’ என்கிற ஊடக உலகின் கேள்வியும் அவரை நெருக்குகிறது. ஒரு பெண் பத்திரிகையாளர் அந்த ஒரு கேள்வியை மட்டும் சுமந்தவாறே அவரது குடும்பத்தைக் கண்காணித்து வருகிறார்.

ஏற்கனவே, தான் செய்த தவறுக்கு வருந்தியும் குடும்பத்தை நினைத்துக் கவலைப்பட்டும் நிம்மதியைத் தொலைத்தவராக இருக்கிறார். ஆதலால், புதிதாகச் சிலர் தனது குடும்பத்தை ‘டார்கெட்’ செய்வது அவருக்குக் கூடுதல் நெருக்கடியைத் தருகிறது.

இந்த நிலையில், மூத்த மகள் அஞ்சுவைப் பெண் பார்த்துவிட்டுச் செல்பவர்கள் முதலில் விருப்பம் தெரிவிப்பதையும் பின்னர் மறுப்பு சொல்வதையும் கண்டு பரிதவிக்கிறார் ஜார்க் குட்டி. ஒருகட்டத்தில், அதன் பின்னால் சிலரது சதி இருப்பதை அறிகிறார். அந்த மனிதர்கள் தனது சுயநலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதையறிந்ததும் அதிர்ச்சியடைகிறார். அவரால் அதனைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

அந்த நேரத்தில்தான், வருண் வழக்கை விசாரித்த கான்ஸ்டபிள் சகாதேவன் தன்னைப் பின்தொடர்வதைத் தெரிந்துகொள்கிறார். அதன் தொடர்ச்சியாக, தனது பிடிவாதத்தைக் கைவிட்டு ஒரு வெளிநாட்டு வரனுக்கு அவசர அவசரமாக அஞ்சுவைத் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார். ‘வருவது வரட்டும்’ என்று அவர் திருமண ஏற்பாடுகளைச் செய்ய, அதனைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது எதிர்தரப்பு. கூடவே, ஜார்ஜ் குட்டி குடும்பம் செய்த குற்றத்தை அம்பலப்படுத்தும் வேலைகளும் நடக்கின்றன.

இறுதியில் என்னவானது? வழக்கம் போல அந்த எதிர்ப்புகளை ஜார்ஜ் குட்டி முறியடித்தாரா என்பதைச் சொல்கிறது கிளைமேக்ஸ்.

முதல் பாகத்திலேயே, தனது மனைவி, மகளின் குற்றத்தை மறைக்கத் தான் செய்த தவறுகளை எண்ணி ஜார்ஜ் குட்டி வருந்துவது காட்டப்பட்டிருக்கும். இரண்டாம் பாகம் அதில் சில துளிகளை அதிகப்படுத்தியது என்றால், மூன்றாம் பாகம் முழுக்கவே அப்பாத்திரத்தின் சஞ்சலம் தான் நிறைந்திருக்கிறது. அதனால், திரைக்கதையில் ‘ட்ராமா’தனம் இருக்குமளவுக்கு ‘த்ரில்’ கூட்டும் அம்சங்கள் இல்லை. அதன் விளைவாக, இருக்கை நுனியில் நம்மை அமர வைக்கிற காட்சிகளும் பெரிதாக இல்லை.

வழக்கமான படமா?

படத்தின் முதல் பிரேமில் மோகன்லாலை எப்படிக் காண்கிறோமோ, அதில் துளியளவு கூட மாறாமல் மகிழ்ச்சியையும் சோகத்தையும் ரௌத்திரத்தையும் காட்டுகிற நுட்பம்தான் அவரது நடிப்பை வியக்க வைக்கிறது. கிட்டத்தட்ட அதே பாணியிலான பாவனைகளை மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில் ஆகியோரும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

சித்திக், ஆஷா சரத், முரளி கோபி, தினேஷ் பிரபாகர், இர்ஷாத், சாந்தி மாயாதேவி, கலாபவன் சாஜன் என முதலிரண்டு பாகங்களில் இடம்பெற்றவர்களோடு வீணா நந்தகுமார் போன்று மிகச்சிலரே இப்பாகத்தில் முகம் காட்டியிருக்கின்றனர். பிஜு மேனன் இதில் ‘சும்மா’ தலைகாட்டியிருக்கிறார்.

சதீஷ் குரூப்பின் ஒளிப்பதிவு, வி.எஸ்.விநாயக்கின் படத்தொகுப்பு, அனில் ஜான்சனின் பின்னணி இசை ஒன்றுசேர்ந்து, வழக்கமான ‘ட்ராமா’ வகைமை மலையாளப் படமொன்றைப் பார்த்த உணர்வையே தருகின்றன.

ஜீத்து ஜோசப்பின் திரைக்கதை, முழுக்கப் பாத்திரங்களின் அக உணர்வுகளுக்கே முக்கியத்துவம் தந்திருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். போலவே, கடைசி 20 நிமிடங்களில் வரும் திருப்புமுனைக் காட்சிகள் ‘ரொம்பவே’ சினிமாத்தனமாக இருக்கின்றன. முந்தைய இரண்டு பாகங்களைப் போல ‘அட’ என்று சொல்ல வைக்கும்விதமாக இல்லை. ஆனாலும், நான்காம் பாகத்திற்கு ‘கொக்கி’ போடும்விதமாக இதில் ‘செகண்ட் கிளைமேக்ஸ்’ வைத்திருக்கிறார் ஜீத்து ஜோசப்.

படம் தமிழிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாகியுள்ளது என்பதால், ‘இந்த மலையாள வார்த்தைக்கு அர்த்தம் என்ன’ என்று சப்டைட்டிலை கூர்ந்து நோக்க வேண்டிய தேவையில்லை. வாயசைப்புக்கு ஏற்ற வசனங்கள் இல்லாவிடினும் காட்சிகளின், கதாபாத்திரங்களின் சாராம்சம் எளிதாகக் கடத்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

வெற்றி பெற்ற படமொன்றின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்குவது எளிதாகக் கவன ஈர்ப்பைப் பெற்றுத்தந்தாலும், அதனைத் தக்கவைக்க வேண்டுமே என்கிற பதற்றத்தையும் படக்குழுவினருக்குப் பரிசாகத் தரும். ‘த்ருஷ்யம் 3’ அதனைச் சமாளித்து ஓரளவுக்கு வெற்றி கண்டிருக்கிறது. அதேநேரத்தில், ‘த்ருஷ்யம்’ போன்றே இதுவும் இருக்குமா என்றெண்ணி வருபவர்களுக்கு இப்படம் தருவது ஏமாற்றமே.

‘த்ருஷ்யம் 3’ விமர்சனம் - மீண்டும் கிட்டியதா இருக்கை நுனி அனுபவம்?
Gangubai Kathiawadi: கருப்பு ரோஜாக்களின் உரிமைக் குரல் கங்குபாய் | திரை தேவதைகள் 17

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in