‘படையப்பா’ மறுவெளியீட்டிலும் வெற்றி பெற்றதை முன்னிட்டு, தேனப்பனுக்கு 5 பவும் தங்க செயினை பரிசாக வழங்கியுள்ளார் ரஜினி.
1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், செளந்தர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘படையப்பா’. இப்படத்தை அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார் ரஜினி. இதில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தவர் தேனப்பன்.
கடந்த ஆண்டு ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு, ‘படையப்பா’ மறுவெளியீடு செய்யப்பட்டது. இதிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைக் கொண்டாடும் விதமாக தற்போது தேனப்பனை அழைத்து 5 பவுன் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் ரஜினி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
மேலும், ‘படையப்பா’ மறுவெளியீட்டிற்காக பேட்டியொன்றை கொடுத்திருந்தார் ரஜினி. அதில் நீலாம்பரி பார்வையில் இருந்து கதையொன்றை ‘படையப்பா’ 2-ம் பாகத்துக்காக தயாராகி வருவதாக கூறியிருந்தார். அப்படம் எப்போது தொடங்கும் உள்ளிட்டவற்றை ரஜினி தெரிவிக்கவில்லை.