பிரஜின் - புகழ் இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘ஊருக்கு ரெண்டு ஊதாரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த காமெடி படத்தை யோகேஸ்வரன் மைனர் இயக்குகிறார். ஏஆர்கே புரொடக் ஷன்ஸ் சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம், வினோத் பெருமாள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜனனி நாயகியாக நடிக்கிறார்.
விக்ரம் விஜய், ரவிமரியா, மைம்கோபி, தீபா, அபிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். காந்த் தேவா இசையமைக்கும் இப்படத்துக்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குநர் யோகேஸ்வரன் மைனர் கூறும்போது, “இது காமெடி ட்ராமாவாக உருவாகும் படம்.
பொதுவாகவே ஊருக்கு 2 ஊதாரி இருப்பார்கள். ஆனால் ஒரே வீட்டில் 2 ஊதாரி இருந்தால் என்ன நடக்கும் என்பதை வைத்து சுவாரஸியமான காமெடி படமாக உருவாக்குகிறோம்” என்றார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. விஜய் சேதுபதி, சுப்ரமணியசிவா, நாத், சவுந்தர்ராஜா, கஞ்சா கருப்பு, தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, சி.வி.குமார், கே.ரமேஷ் பாண்டியன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.