எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, ஹீரோவாக நடிக்கும் படம், ‘நிர்வாகம் பொறுப்பல்ல’.
இதில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். என்.எஸ்.ராஜேஷ்குமார் ஒளிப் பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இதை ஆர்கே ட்ரிம் ஃபேக்டரி சார்பில் டி.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். டிச.5-ல் வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கவுரவ் நாராயணன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.கார்த்தீஸ்வரன் பேசும்போது, “எல்லோரும் ஏதேனும் ஒரு மோசடியில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கி இருப்போம். இதில் 4 வகையான மோசடிகளை சொல்லி இருக்கிறேன். இதில் நாயகனாகவும் நடித்து இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறேன். இதற்கு விதைப் போட்டவர், கே.பாக்யராஜ்தான். ஹீரோவாகவும் நடித்து, இயக்கவும் முடியும் என்ற அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நானும் இயக்கி நடித்துள்ளேன்” என்றார்.