

பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள ‘அகண்டா 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நடிகர் பாலகிருஷ்ணா நடித்து, 2021-ல் வெளியான ‘அகண்டா’ படம் சூப்பர் ஹிட்டானது. போயபதி ஸ்ரீனு இயக்கிய இதில் பாலகிருஷ்ணா 2 வேடங்களில் நடித்திருந்தார். இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகியுள்ளது.
ஃபேன்டஸி ஆக் ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன், ஆதி உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள இப்படம் டிச.5-ல் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - போன பாகத்தில் உள்நாட்டு எதிரிகளுடன் சண்டை போட்ட பாலையா இதில் சீன நாட்டைச் சேர்ந்த எதிரிகளுடன் சண்டை போடுகிறார். வெளிநாட்டு எதிரிகளால் சனாதன தர்மத்துக்கு ஆபத்து வருவதை தெரிந்து கொண்டு வீறு கொண்டு எழும் பாலகிருஷ்ணா எதிரிகளை (உண்மையாகவே) பந்தாடி ஒற்றை ஆளாக ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்துகிறார்.
பாலகிருஷ்ணா படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது எழுதப்படாத விதி. இதிலும் ரசிகர்கள் அந்த விதியை எந்த நிபந்தனையும் இன்றி பின்பற்ற வேண்டியிருக்கும் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. ‘அகண்டா 2’ ட்ரெய்லர் வீடியோ: