சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் நேற்று வெளியானது. இதில் நஸ்ரியா, நஸ்லென் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் புரமோஷனில், ‘3 அல்லது 4-வது முயற்சிக்குப் பிறகே நஸ்ரியா என்னுடன் நடிக்கச் சம்மதித்தார். 12 ஆண்டுகளாகத் தமிழில் எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்த அவர், இறுதியில் எங்கள் படத்தில் நடிக்கச் சம்மதித்ததற்கு நன்றி” என்று சூர்யா கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள நஸ்ரியா, “சூர்யா சார் அப்படிச் சொன்னது வெறும் நகைச்சுவைக்காகத்தான். உண்மையில் கால்ஷீட் பிரச்சினை மற்றும் சில குழப்பங்கள் காரணமாகவே நடிக்க முடியாமல் போனது. சூர்யாவின் திரைப்படத்தை நான் எப்படி வேண்டுமென்றே நிராகரிக்க முடியும்?
12 ஆண்டுகளாகத் தமிழில் நடிக்காததற்குத் தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை. சரியான கதை மற்றும் கதாபாத்திரம் எனக்கு அமையாததால்தான் நடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். நஸ்ரியா, தமிழில் கடைசியாக ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.