இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமான ‘அன்னக்கிளி’ திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா கூறியதாவது:
இப்போது இயக்குநர் பால்கி, தமிழில் இயக்கும் படத்துக்கு இசை அமைத்துக் கொண்டிருக்கிறேன். வருடம்தான் போய்க் கொண்டிருக்கிறதே தவிர, நான் எங்கிருந்து எப்படி வந்தேனோ, அப்படியே தான் இருக்கிறேன். எல்லோரும் இசைக் கடவுளாக என்னைப் பார்ப்பது பற்றி கேட்கிறார்கள். அது, அவர்களின் அன்பைக் காட்டுகிறது. நான் இசையமைக்கும்போது என் மனதில் எந்த நினைவும் இருக்காது. வெறுமையாகவே இருக்கும். கோயிலுக்குப் போவதை விட இசை மிகவும் புனித மானது.
அதனால் தான் மக்கள் என்னை என்னென்னவோ சொல்லிக் கொண்டாடுகிறார்கள். நான் இல்லாமல் போனாலும் அந்த கொண்டாட்டம் தொடரும் என்பது எல்லோருக்கும் தெரியும். ‘அன்னக்கிளி’ படத்துக்கு இசை அமைத்த அனுபவம் பற்றி கேட்கிறீர்கள். ஜி.கே.வெங்கடேஷ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் நான் வாத்தியங்கள் வாசித்துக் கொண்டிருந்தேன்.
சுமார் 250 படங்களுக்கு மேல் பணிபுரிந்தாலும் எனக்கென்று பட வாய்ப்பு வந்தபோது, எப்படிப் பாடலை தொடங்குவது? என யோசித்துப் பார்த்தேன். மற்ற இசை அமைப்பாளர்களிடம் பணியாற்றிய போது எனக்கு இப்படியொரு எண்ணம் வந்ததே இல்லை. ஆனால், எனக்கென்று வந்தபோது பல யோசனைகள் வந்தது. என்னைத் தனிக்காட்டில் விட்ட மாதிரி இருந்தது. ‘அன்னக்கிளி உன்ன தேடுதே’ என பாடல் வரிகளை எழுதிவிட்டார்கள். பீச்சில் நடந்து கொண்டே பாடலுக்கான இசையை எப்படித் தொடங்கலாம் என யோசித்துக் கொண்டே இருந்தேன்.
ஒரு பெண்ணின் விரகதாபத்தை இந்தப் பாடல் சொல்கிறது என்ற எண்ணத்தில், ஒரு ஹம்மிங்கை வைத்தேன். இதற்காகப் பல நாட்கள் யோசித்தேன். பிறகு எங்கெங்கு ஷாட் வைக்கப் போகிறார்கள் என்று யோசித்து இசை அமைத்தேன். ஒவ்வொரு பாடலையும் இப்படி இசை அமைத்துக் கொடுத்ததால் தான் இன்றும் உயிரோடு இருக்கிறது. ரசிகர்களின் ஆத்மாவாக மாறியிருக்கிறது. இவ்வாறு இளையராஜா கூறினார். இயக்குநர்கள் பால்கி, கே.பாக்யராஜ், பாடலாசிரியர் பா.விஜய் உடன் இருந்தனர்.