தமிழ் சினிமா

‘மை லார்ட்’ விமர்சனம்: ராஜுமுருகன் பேசிய வர்க்க அரசியல் எப்படி?

டெக்ஸ்டர்

‘குக்கூ’ தொடங்கி ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’  வரை தனது படங்களில் சமூக அவலங்களையும், வர்க்க அரசியலையும் பேசி வரும் ராஜுமுருகனின் அடுத்த படைப்பாக வெளியாகி இருக்கிறது ‘மை லார்ட்’. தமிழகத்தில் சமீபகாலமாக செய்திகளை அதிகமாக ஆக்கிரமிக்கும் கிட்னி விற்பனை என்ற களத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். 

கோவில்பட்டியில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் முத்துசிற்பி (சசிகுமார்), தனது மனைவி சுசீலாவின் (சைத்ரா) மருத்துவ சிகிச்சைக்காக ஒரு கந்துவட்டிக்காரரிடம் கடன் வாங்குகிறார். ஆனால், அந்த ஒரு சூழல் அவர்களை ஒரு மிகப் பெரிய வலைக்குள் தள்ளுகிறது. அரசாங்க ஆவணங்களில் முத்துசிற்பியும் அவரது மனைவியும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறார்கள். அவர்களின் அடையாளம் பறிக்கப்படுகிறது.

          

மறுபுறம், பெரும் செல்வந்தரான சுஜாதா மோகன் (ஆஷா சரத்) என்ற பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அவரது பிள்ளைகள் சட்டவிரோதமாக கிட்னியை வாங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எதேச்சையாக முத்துவின் சிறுநீரகம் அவருக்குப் பொருந்துகிறது. உயிருடன் இருந்தும் சட்டப்படி பிணமாக அறிவிக்கப்பட்ட ஒரு மனிதனை, அதிகாரம் எப்படித் தனது தேவைக்காகப் பயன்படுத்த முயல்கிறது? இழந்த அடையாளத்தை மீட்க ஒரு பத்திரிகையாளர் (குரு சோமசுந்தரம்) உதவியுடன் முத்து நடத்தும் சட்டப் போராட்டமே படத்தின் மீதிக்கதை.

எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்கு பெரிதும் கைகொடுத்திருப்பது படத்தின் வசனங்கள். ஒவ்வொன்றும் அதிகாரத்தை நோக்கி ஏவப்படும் கூர்மையான அம்புகளைப் போல அழுத்தமாக தைக்கின்றன. ‘ஜோக்கர்’ படத்துக்குப் பிறகு இதில் வசனங்கள் பெரிய ப்ளஸ் ஆக அமைந்துள்ளன. குறிப்பாக ‘அதிகாரத்துக்கு ஏழைகள் வெறும் நம்பர்தான்’, ‘என்ன தேடுறீங்க? நீதியையா?’ போன்ற வசனங்கள் அப்ளாஸ் ரகம்.

எனினும் ‘ஜோக்கர்’ போல அரசியல் நையாண்டி பாணியில் தொடங்கும் படம், போகப்போக அதன் பாதையை விட்டு விலகி வேறொரு திசையில் செல்கிறது. அதிலும் சசிகுமாரின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கிட்டத்தட்ட ஜோக்கரின் மற்றொரு வெர்ஷனைப் போலவே இருக்கின்றன.

அவ்வளவு பெரிய ப்ளாஷ்பேக்கில் ஆடியன்ஸை உணர்வுபூர்வமாக  இணைய வைக்கும் காட்சிகள் எதுவும் இல்லை. படத்தின் இன்டர்வெல் காட்சி நிமிர்ந்து உட்கார வைக்கிறது. எனினும் முதலிலிருந்தே அந்த ட்விஸ்ட்டுக்கான சஸ்பென்ஸை காப்பாற்றியிருந்தால் இன்னும் சர்ப்ரைஸ் ஆக இருந்திருக்கும். 

பல இடங்களில் ‘நந்தன்’ கேரக்டரை நினைவூட்டினாலும் சசிகுமார் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார். தனது அடையாளத்தை இழந்து தவிக்கும்போது அவர் காட்டும் அந்த இயலாமை மிக எதார்த்தம். கோர்ட் காட்சியில் தேம்பி அழும்போது பார்ப்பவர்களையும் கலங்கடிக்கிறார். 

கன்னடத்தில் பிரபலமான சைத்ராவுக்கு இதில் முக்கியமான கதாபாத்திரம். ஆரம்ப காட்சிகளில் முக்கியத்துவம் தரப்பட்டாலும், இரண்டாம் பாதியில் வெறுமனே வந்து செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். 

ஷான் ரோல்டனின் இசை இப்படத்தின் மற்றொரு பெரிய பலம். தேவையற்ற சத்தங்களைத் தவிர்த்து, படம் முழுக்க தனது மென்மையான பின்னணி இசையால் கதைக்களத்தின் கனத்தை உணரச் செய்திருக்கிறார். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு சிறப்பு. 

திரைக்கதையில் பல இடங்களில் ஒரு வித நாடகத் தன்மை மேலோங்கி நிற்பதைத் தவிர்க்க முடியவில்லை. அதிலும் சசிகுமார், சைத்ரா தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒருவித செயற்கைத் தன்மையுடனே நடந்து கொள்கின்றன, குருசோமசுந்தரம் உட்பட. கந்துவட்டிக் காரராக வரும் நபர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நெகட்டிவ் கதாபாத்திரங்கள் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். 

படத்தில் இருக்கும் இன்னொரு முக்கிய பிரச்சினை, எமோஷனல் காட்சிகள் எதுவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. க்ளைமாக்ஸ் காட்சி அத்தகைய உணர்வை தர முயன்றாலும் அதற்கு முந்தைய காட்சிகளின் பலவீனத்தால் அது எடுபடாமல் போகிறது. 

எனினும் ஒரு முக்கிய சமூக பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு, அதில் வர்க்க அரசியலையும், உறுப்பு தானம் என்ற பெயரில் நடக்கும் கார்ப்பரேட் அரசியலையும் தோலுரித்துக் காட்டும் இப்படத்தை சில குறைகளை தாண்டியும் வரவேற்கலாம்.

SCROLL FOR NEXT