அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-வது பட விழா, ஜன.28 முதல் பிப் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8 நாட்கள் நடைபெறும் இப்பட விழாவில் சுமார் 70 திரைப் படங்கள் திரையிடப்படுகின்றன. இவ்விழாவில் இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கப்பட இருக்கிறது.
இதை விழா ஏற்பாட்டாளர்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். இந்திய மற்றும் சர்வதேச கலைஞர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், திரைப்பட ஆர்வலர்கள் முன்னிலையில், ஜன. 28 அன்று மாலையில் நடைபெறும் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட இருக்கிறது.
திரைப்பட விமர்சகர் லத்திகா பட்கோங்கர் (தலைவர்), திரைப்பட இயக்குநர்களான அசுதோஷ் கோவாரிக்கர், சுனில் சுக்தங்கர், சந்திரகாந்த் குல்கர்னி ஆகியோர் அடங்கிய குழு இளையராஜாவை, இந்த விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. அவருக்கு, பத்மபாணி நினைவுச் சின்னம், பாராட்டுப் பத்திரம், ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதற்கு முன்னர் இந்த விருதைப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், மூத்த இயக்குநர் - எழுத்தாளர் சாய் பரஞ்ச்பே, நடிகர் ஓம் பூரி போன்றோர் பெற்றுள்ளனர்.