நான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் முடித்து வெளியே வந்தபோது, கல்லூரி தந்த மகிழ்ச்சி, ஜாலி, கிண்டல், விளையாட்டு எல்லாம் ஒரே நாளில் என் பின்னால் மறைந்து கொண்டு, என்னை ஒரு சூனியத்தின் முன் நிறுத்தியது போல உணர்ந்த ஆண்டு 1982. நான் படிப்பில் கெட்டிக்கார மாணவன் இல்லை. பலமுறை பரீட்சையில் தோல்வி அடைந்திருக்கிறேன்.
கல்லூரி முடிந்ததும் என்ன செய்வது என்று புரியவில்லை. என் அக்கா ஹேமமாலினி டப்பிங் பேச செல்லும் போது நானும் உடன் செல்வேன் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அப்போது எனக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை. நாங்கள் வசித்த வீட்டின் கீழே, சைனுதீன் என்பவர் இருந்தார். அவர்தான் என்னை பினாக்கா பற்பசை நிறுவனத்தில் சேர்த்துவிட்டார்.
நாங்கள் சின்ன போரூரில் வசித்தோம். அங்கிருந்து வேலைக்காக சைக்கிளில் வில்லிவாக்கம், அயனாவரம், பாரிஸ் கார்னர் என்று செல்வேன். பிறகு திரும்புவேன்.
தினமும் குறைந்தது இருபத்து ஐந்திலிருந்து ஐம்பது கிலோமீட்டர் சைக்கிள் மிதிப்பது வழக்கம். அப்போது எனக்கு வேலையில் சின்ன பிரச்சினை இருந்தது. வெளியூர் சென்று வேலை பார்க்க வேண்டும் என்று அந்நிறுவனம் சொன்னது. என் குடும்பத்தில் அதற்கான சூழல் அமையவில்லை.
அதனால் மறுபடியும் டப்பிங் பேசுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடம் அருகில் மெட்ராஸ் சினி லேப் என்ற டப்பிங் தியேட்டர் இருந்தது. அங்கு இயக்குநர் கே.விஜயன் அவர்கள் இயக்கிய ‘தூரத்து இடி முழக்கம்’ படத்தின் டப்பிங் நடந்து கொண்டிருந்தது. அப்படத்தின் நாயகிக்கு என் சகோதரி பின்னணி குரல் கொடுத்தார்.
நானும் அக்காவுடன் செல்வேன். அப்போது அங்கு பைக்கில் வாட்டசாட்டமான இளைஞர் ஒருவர் வந்தார். நீளமான தலைமுடி. அவர் வண்டியிலிருந்து இறங்கியதே ஸ்டைலாக இருந்தது. ஆள் யாரும் பழக்கமில்லை என்றாலும் எல்லோரிடமும் நலம் விசாரித்தார். சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தார்.
அவர்தான் அந்தப் படத்தின் ஹீரோ, என் அண்ணனாகவும் அம்மாவாகவும் இருந்த, இருக்கிற, கேப்டன் விஜயகாந்த்! அந்தப் படத்தில் விஜயகாந்துக்கு டாடி சாமி என்று நான் அழைக்கிற, தீனரட்சகன் என்ற வி.டி.ரட்சகன் டப்பிங் பேசினார். அங்கு அவர் அடிக்கடி வரும்போது, நான் அவருக்கு அறிமுகமானேன். பிறகு என் தம்பியின் நண்பர் மணி என்பவர் இருந்தார். அவரும் விஜயகாந்த் அண்ணாவும் நண்பர்கள்.
அவர் மூலமாக அவர் இன்னும் நன்றாகப் பழகினார். அப்போது அவரை நான் அண்ணா என்று அழைப்பேன். மதுரை வழக்கில்தான் அவர் பேச்சு இருக்கும். அதற்குப் பிறகு ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்திலும் அண்ணன் கதாநாயகனாக நடித்தார்.
அந்தப் படத்தின் டப்பிங், ஆழ்வார்பேட்டையில் இருந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் ஐயாவின் ஏபிஎன் டப்பிங் தியேட்டரில் நடந்தது. விஜயகாந்துக்கு எஸ்.என்.சுரேந்தர் டப்பிங் பேசினார். அப்படத்தில் வரும் மூன்று வில்லன்களில் ஒருவருக்கு நான் பேசினேன்.
அந்த கதாபாத்திரத்துக்கு பாஸ்கர் தான் பேசவேண்டும் என்று என்னைப் பிடிவாதமாக அதில் பேசவைத்தது, நான் மாமா என்று அன்போடு அழைக்கிற திரு. எஸ்.ஏ.சந்திரசேகர். அப்போது அங்கு வரும் விஜயகாந்த் என்னிடம் நலம் விசாரிப்பார். ஒரு படம் ஹீரோவாக நடித்து விட்டாலே மற்றவர்களிடம் பேசுவதைக் குறைத்துக்கொள்கிற சினிமா உலகில் அவர் இயல்பாக, எல்லோரிடமும் சகஜமாக, உண்மையாக பேசிக் கொண்டிருந்தது எனக்கு பிடித்திருந்தது. அவர் பாண்டிபஜார் ராஜா பாதர் தெருவிலிருந்த ரோகிணி லாட்ஜில் தங்கி இருந்தார்.
நான் அந்தப் பக்கமாக எப்போது சென்றாலும் அண்ணன் இருக்கிறாரா? என்று அவரைப் பார்க்கச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போது அறையில் கீழே ஒரு தலையணை போட்டு தரையில் படுத்திருப்பார். என்னைக் கண்டால், “வா பாஸ்கர், எங்க போயிட்டு வர்றே?” என்பார். “டப்பிங் பேசிட்டு அப்படியே வர்றேண்ணே” என்பேன்.
“சாப்டியா “? என்று கேட்பார். “இல்ல, வீட்டுக்கு போயி சாப்பிடணும்” என்று சொல்வேன். அப்போதே அங்கு எல்லோருக்கும் சாப்பாடு உண்டு. சுமார் 12, 13 பேருக்கு தினமும் சாப்பாடு கொடுப்பது வழக்கம். என்னையும் விடமாட்டார். அங்கேயே சாப்பிடுவேன். பிறகு வீட்டுக்குக் கிளம்புகிறேன் என்பேன். “அங்க போய் என்ன பண்ண போற?” “இல்லண்ணே தூங்குவேன்” “இந்தா தலையணை. இதை வச்சு இங்கயே தூங்கு” என்பார்.
விழித்ததும் ஒரு காபி வரும். குடித்துவிட்டு, “இப்ப வீட்டுக்கு போ” என்பார். “இந்த மனசு யாருக்கு வரும்?” என்று வியப்பேன். அப்போது நான் ஸ்கூட்டர் வைத்திருந்தேன். அவரிடம் பேசிவிட்டு வீட்டுக்கு வந்து விடுவேன். பிறகு எப்போது அந்தப் பக்கம் போனாலும் அண்ணன் இருக்காரா? என்று பார்ப்பதையும் அவருடன் சாப்பிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தேன்.
எனக்கு அவர் செய்திருந்த உதவிகள், எனக்காக அவர் பல கம்பெனிகளில் பரிந்துரைத்தது, என்னிடம் விளையாடியது, என்னைக் கிண்டல் செய்தது, நடிகர் சங்கத்தில் எனக்கு ஆயுட்கால உறுப்பினர் கார்டு கொடுத்தது என பல விஷயங்கள் என்னுள் இருக்கின்றன. அதை அடுத்தடுத்த வாரங்களில் பேசுகிறேன்.
(திங்கள்தோறும் பேசுவோம்)