தமிழ் சினிமா

ஷீக்கிங் டூடு எனும் மெக்கானிக் நண்பன் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 17

Guest Author

எல்​லோரிட​மும் எளி​தாக பழகி விடு​வேன் என்​ப​தால் எனக்கு நண்​பர்​கள் வட்​டம் பெரிது. எங்கு வீடு மாறி​னாலும் அங்கு எனக்கு நண்​பர்​கள் கிடைத்து விடு​வார்​கள். அப்​படி சென்னை வளசர​வாக்​கத்​தில் நாங்​கள் வசித்த போது எனக்கு நண்​ப​னானவன் ‘ஷீக்​கிங் டூடு’. சிறந்த பைக் மெக்​கானிக். இருசக்கர வாக​னங்​களின் காதலன். மெக்​கானிக் வேலையை காதலோடு செய்​பவன்.

கேரள மாநிலம் பத்​தனம்​திட்​டாவைச் சேர்ந்த அவனுடைய அம்மா அங்கு இருந்​தார். அப்பா இல்​லை. இங்​கு, அவன் சித்தி வீட்​டில் வசித்​துக்​கொண்டு “பாலாஜி ஆட்டோ மொபைல்​ஸ்” என்ற மெக்​கானிக் ஷாப் நடத்தி வந்​தான். நான் அவன் கடை​யில்​தான் எப்​போதும் இருப்​பேன்.

சரி​யான சாப்​பாட்​டுப் பிரியன். மதி​யம் மட்​டும் ஒன்​றரை கிலோ இறைச்சி சாப்​பிடு​வான். கூடவே அதற்கு ஏற்ற மாதிரி சோறும். அடிக்​கடி நொறுக்​குத் தீனிகளை​யும் தின்று கொண்​டிருப்​பான். உடல் நலன் மீது அதிக அக்​கறை கொண்ட அவன், வெயிட் லிஃப்​டிங் ஆர்​வலன். அவனைக் கிண்​டல் பண்​ணுவது அவனுக்கே ரொம்ப பிடிக்​கும்.

நான், பெரிய கிராமம் ரவி, பார்த்​திபன், திருநெல்​வேலியை சேர்ந்த கணேசன், எனது உறவினர் பாபு என்​கிற அசோக்​கு​மார் என்று சில நண்​பர்​கள் உண்​டு. எப்​போதும் ஜாலி​யாக அவனைக் கிண்​டல் செய்​து​கொண்டே இருப்​போம். டூடு என்ற பெயரை ஆரம்​பத்​தில் முத்து என்று தவறாகப் புரிந்து கொண்​டேன். பிறகு டூடு என்று புரி​யும்​வித​மாகச் சொன்​னான்.

          

அது ஆங்​கில கவிஞர் ஒரு​வரின் பெய​ராம்​.(அவன்​தான் சொன்​னான்!) அவனது சிறப்பே எப்​போதும் சிரித்​துக்​கொண்டே இருப்​பது​தான். எதைச் சொன்​னாலும் அவனிடம் இருந்து ஒரு வெடிச்​சிரிப்பு வரும். அதனாலேயே அவனை எல்​லோருக்​கும் பிடிக்​கும். செவ்​வாய்க்​கிழமை அவனுடைய கடை லீவு.

அதனால் திங்​கட்​கிழமை இரவே அவனிடம் “நாளைக்கு காலைல நாலரை மணிக்கு ரெடி​யா​யிரு, ஒரு இடத்​துக்​குப் போறோம்” என்​பேன். உடனே “சரி வாத்​யாரே” என்​பான். (அவன் என்னை ‘வாத்​தி​யாரே’ என்​றும், எனது தம்​பியை ‘சின்ன வாத்​யாரே’ என்​றும் அன்​போடு அழைப்​பான்! என் தம்பி செப்​டம்​பர் 27, 2016-ல் கால​மாகி விட்​டார்.) பிறகு காலை​யில் பைக்கை எடுத்​துக்​கொண்டு இரு​வரும் அப்​படியே திருப்​ப​தி, திருத்​தணி சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்​புவோம்.

அது ஜாலி​யான பயண​மாக இருக்​கும். திடீரென்று ஏதாவது ஒரு இடத்​தில் பைக்கை நிறுத்​தி, “இப்ப நீ வண்​டிய ஓட்​டு” என்​பான். அப்​படி​யென்​றால் அவன் பின்​னால் உட்​கார்ந்து நொறுக்​குத்​தீனி சாப்​பிடப்​போகிறான் என்று அர்த்​தம். சரி என்று நான் ஓட்​டிக்​கொண்டு வரு​வேன். எப்​போதும் நாங்​கள் ஒன்​றாகவே சுற்றுவதால், அவனைப்​பற்றி என்​னிட​மும் என்​னைப்​பற்றி அவனிட​மும் அக்​கம் பக்​கத்​தில் இருப்​பவர்​கள் விசா​ரிப்​பார்​கள். அந்​தளவுக்கு நெருக்​க​மாக இருப்​போம்.

அப்​போது நான் டப்​பிங் பேசிக் கொண்​டிருந்​த​தால், “அவரை போல பேசு, இவரைப் போல பேசு, இப்​படிப்​பேசு. அப்​படிப்​பேசு” என்று கேட்​டுக் கொண்டே வரு​வான். நானும் பேசிக்​கொண்டு வரு​வேன். அடிக்​கடி சோக​மாக அமர்ந்து விடு​வான். என்ன என்று விசா​ரித்​தால், “வாழ்க்​கையே வெறுத்து போகுது, மெக்​கானிக் ஷாப் சரியா ஓடலை. பேசாம தற்​கொலை பண்​ணிக்​கலாம்னு தோணுது” என்​பான்.

நான், “டேய், அந்த மாதிரி நினைப்​பெல்​லாம் வரவே கூடாது. எனக்கு கூடத்​தான் டப்​பிங் வாய்ப்பு அதி​கமா வர்​ற​தில்​லை. அதுக்கு என்ன பண்ண முடி​யும். அதையெல்​லாம் தாண்​டி​தான் முன்​னேறணும்” என்று நம்​பிக்கை அளிப்​பேன். அப்​போது அவனுக்கு ஊரில் பெண் பார்த்​திருந்​தார்​கள். நான் டப்​பிங்​கில் பிசி​யாக இருந்​த​தால் திரு​மணத்​துக்கு போக இயல​வில்​லை. அவனும் புரிந்து கொண்​டான். பிறகு கேரளா சென்று திரு​மணம் செய்​து​கொண்டு வந்​தான்.

டூடு​வுக்கு இரவு நேரத்​தில் மதுகுடித்து விட்டு வருபவர்​களைக் கண்​டால் பிடிக்​காது. எரிச்​சலடை​வான். ஒரு நாள் இரவில் அவன் கடைக்கு எதிரில் ஒரு​வர் போதை​யில் உளறியபடி நிற்க முடி​யாமல் நின்​றிருக்​கிறார். “யாருப்பா நீ. இங்க வந்து கத்​திக்​கிட்டு இருக்​கே!” என்று சொல்​லி​விட்டு அவரை அரு​கில் சென்று பார்த்​தவனை அந்த குடி​காரர், முகத்​திலேயே குத்தி விட்​டார்.

வலி தாங்க முடி​யாத டூடு, அவரை நையப்​புடைத்​திருக்​கிறான். குடி​காரர் கீழே விழுந்​ததைப் பார்த்​ததும் அவர் இறந்​த​தாக நினைத்து கடைக்கு ஓடி வந்து மறைந்து கொண்​டிருக்​கிறான் டூடு. யாரும் பார்த்​திருப்​பார்​களோ என்ற பயம் வேறு. குடி​காரர் எழுந்து கொள்​கிறாரா என்று கடை​யில் இருந்து பார்த்​துக்​கொண்டே இருந்​திருக்​கிறான். சிறிது நேரத்​துக்கு பிறகு அவர் எழுந்து சென்​றதும்​தான் இவனுக்கு உயிரே வந்​திருக்​கிறது.

இப்​படி​யான நண்பன், இரண்டு மூன்று நாள் ஒரு மாதிரி​யாக ‘மூட் அவுட்​’டில் இருந்​தான். முகமே, அவனுக்கு ஏதோ பிரச்​சினை என்​பதை காட்​டிக் கொடுத்​தது. விசா​ரித்​தால், “ஒன்​றுமில்​லை” என்​றான். “வீட்​டுல ஏதும் பிரச்​சினை​யா? என்​னன்னு சொல்​லு​டா?” என்று கேட்​டும் “ஒன்​றுமில்​லை, நார்​மலா​தான் இருக்​கேன்” என்று சொல்​லி​விட்​டான்.

“நீ எப்​ப​வும் சிரிச்​சுக்​கிட்டே இருக்​கிறவன், இப்ப அதை உன் முகத்​துல பார்க்க முடியல. என்​னன்னு சொல்ல மறுக்​கிற?” என்று நான் கேட்​ட​போது, “ஒரு பிரச்​சினையு மில்ல வாத்​யாரே... நார்​மலாகத்​தான் இருக்​கேன்” என்​றான்! அப்​போது அவன் மனைவி மூன்று மாத கர்ப்​ப​மாக இருந்​தார்.

பிறகு ஒரு நாள் காலை​யிலேயே டப்​பிங்​குக்கு சென்​று​விட்​டேன். மதி​யம் இரண்​டு, மூணு மணி இருக்​கும், என் மனைவி ஃபோன் செய்​து, “டூடு விஷம் குடிச்​சுட்​டா​னாம்” என்று சொன்​னார்.

எனக்கு ஒன்​றும் புரிய​வில்​லை. எதுக்கு இப்​படி செய்​தான் என்று தெரிய​வில்​லையே என அவன் அனு​ம​திக்​கப்பட்​டிருந்த மருத்​து​வ​மனைக்கு பதறியபடி சென்​றேன். அவனுடைய சித்தி மரணமடை​யும் போது, எந்த மருத்​து​வ​மனை​யில், எந்த படுக்​கை​யில் படுத்​திருந்​தா​ரோ, அதே மருத்​து​வ​மனை​யில், அதே படுக்​கை​யில் அவனை படுக்க வைத்​திருந்​தார்​கள்.

நான் டாக்​டரிடம் விசா​ரித்​தேன். “வயலுக்கு அடிக்​கிற பூச்சி மருந்தை ஒன்​றரை பாட்​டில் குடிச்​சிருக்​கார்” என்​றார். குடி​காரர்​களை வெறுக்​கிற அவன், மது​வில் பூச்சி மருந்தை கலந்து குடித்​திருக்​கிறான். என்​னால் அதைத்​தாங்க முடிய​வில்​லை. நான் வீட்​டுக்​குப் போய் விட்டு மீண்​டும் வரு​வதற்​குள் அவன் இறந்​திருந்​தான். கதறியபடியே அவன் உடலை ஆம்​புலன்​ஸில் கேரளா​வுக்கு அனுப்பி வைத்​தேன்.

அரு​மை​யான நண்பன், எதற்​காகத் தற்​கொலை செய்து கொண்​டான் என்று இன்​று​வரை எனக்கு தெரிய​வில்​லை. ஒரு துண்டு சீட்​டில், ‘என் மரணத்​துக்கு யாரும் காரணமில்​லை’ என்று மலை​யாளத்​தில் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்​திருக்​கிறான்.

பிறகு அவன் அம்மா சென்னை வந்​த​போது, என்னை கட்​டிப்​பிடித்து கொண்டு கண்​ணீர் விட்​டார். பிறகு, “ஏதாவது சொன்​னா​னாப்​பா?” என்று கேட்​டார். இல்லை என்று சொல்​லி​விட்டு அவன் எழுதி வைத்​திருந்த சீட்டை அம்​மா​விடம் கொடுத்து கண்​ணீர் விட்​டேன்.

அவன் இறந்​தது பிப்​ர​வரி 15, 1997. இப்​போது அவன் மறைந்​து, இருபத்தி ஒன்​பது வருடங்​கள் ஓடி விட்​டன! ஆனால் இன்​னும் என் மனதுக்​குள்ளே இருக்​கிறான். அவன் சிரித்​த​வாறே அவ்​வப்​போது என் முன் வந்து நின்று ‘வாத்​யாரே’ என்று அழைப்​பது போல் உணர்​கிறேன்.

சமீபத்​தில் படப்​பிடிப்​புக்​காக கேரளா சென்​றிருந்த போது, அவன் வீட்டை கண்​டு​பிடித்து அவன் குடும்​பத்​தாரை பார்த்து பேசி​விட்டு வரலாமா என்று நினைத்​தேன். ஆனால், இத்​தனை வருடங்​களுக்கு பிறகு அவனை அந்த ஊரார் நினைவு வைத்​திருப்​பார்​களா? என்று தெரி​யாமல் வந்​து​விட்​டேன்​.

அதி​க​மாக சாப்​பிடும்​ யாரை​யா​வது கண்​டால்​ இன்​றும்​ எனக்​கு அவன்​ நினை​வு வரும்​. அது எனது இறுதி மூச்​சு வரை வரும்​.

(திங்​கள்​தோறும்​ பேசுவோம்)

SCROLL FOR NEXT