தமிழ் சினிமா

சினிமாவில் நான் சந்தித்த சவால்கள் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 15

Guest Author

நான் நடிக்க வாய்ப்பு தேடும் போது எளி​தாக எனக்கு கிடைத்து விட​வில்​லை. எப்​படி​யா​வது சினிமாவில் இருந்​து​தான் ஆக வேண்​டும் என்று முடிவு செய்து தீவிர​மாக முயற்சி செய்​தும் பலனில்​லை. அதற்​காக ஒதுங்கி விட​வும் மனமில்​லை. நான் எங்கு சென்​றாலும் சினிமாவே என் மனம் முழு​வதும் இருந்​தது.

​நான் பல பேட்​டிகளில் சொன்​னது போல, ‘ஒரு படம் நடிச்சா ரெண்டு படம் ஃப்​ரீ’ என்று கூட ஒரு திட்​டத்தை அறிவிக்​கலாம் என நினைத்​தேன். அப்​போது என் தோற்​றம் ரஜினி சார் மாதிரி இருக்​கும். என் ஹேர் ஸ்டைலை​யும் அவர் போல​தான் வைத்​திருப்​பேன்.

“ரஜினி​காந்த் மாதிரியே நளினி​காந்​துன்னு ஒருத்​தர் இருக்​காரு. நளினி​காந்த் மாதிரியே இன்​னொரு காந்​தும் வந்​துட்​டாரு. உன் மூஞ்​சி​யும் அப்​படித்​தான் இருக்​கு. சினிமாவுல நடிக்க வந்து நீலாம் ஒன்​னும் பண்​ணப்போற​தில்ல, போயா” என்று முகத்​துக்கு நேராக சொன்​னார் ஒரு இயக்​குநர்.

இதற்​காக நான் வருத்​தப்​பட​வில்​லை. வருத்​தப்​பட்டு என்ன நடந்து விடப்​போகிறது? அதனால், அதை ஒரு சவாலாக எடுத்​துக் கொண் டேன். அதற்​குப் பிறகு அதே நபர், ஒரு படம் இயக்​கிக் கொண்​டிருந்​தார். அவர் யார், என்ன படம் என்​பதை சொல்ல விரும்​ப​வில்​லை. காலம் எப்​போதும் ஒரே மாதிரி​யாக இருக்​காது என்​ப​தற்​காக​வும் எல்​லோருக்​கும் அவர்​கள் தேடும் வாய்ப்பு என்​றாவது கண்​டிப்​பாக கிடைக்​கும் என்​ப​தற்​காக​வுமே இதை சொல்​கிறேன்.

அவர், என்​னிடம் எப்​போதோ அவமானப்​படுத்தி பேசி​யதை மறந்து விட்​டார். ஆனால் காயப்​பட்ட மனம் எதை​யும் மறக்​காது. அவர் எனக்கு போன் செய்​து, “நீங்க என் படத்​துக்கு ரெண்டு நாள் கால்​ஷீட் தரணும். நீங்க நடித்​தால் என் படத்​துக்கு ஒரு மெரிட் வரும் தம்​பி” என்​றார். அவர் கேட்​கும் போது உண்​மை​யிலேயே டி.​வி.தொடர்​களில் பிசி​யாக இருந்​தேன் என்​ப​தால் கால்​ஷீட் கொடுக்க முடிய​வில்​லை.

இதே போல இன்​னொரு இயக்​குநரிடம் என்​னுடைய நண்​பர் அசோசி​யேட்​டாக பணிபுரிந்​தார். அந்த இயக்​குநரை அண்ணா என்று அழைத்து ஆசை​யாக பேசுவேன். அப்​போது அந்​தப்​படத்​தில் சின்ன ரோலில் நடிக்க ஆள் தேவை​யாக இருந்​தது. வெறும் இரண்டு சீன்​தான். அசோசி​யேட்​டாக பணிபுரிந்த நண்​பர், என் பெயரை சொன்ன போது, “அவர் டப்​பிங் ஆர்ட்​டிஸ்ட், அவரை போய் நடிக்​கச் சொல்​றே.

மைக்​கிட்ட நிக்​கிற மாதிரி நின்​னுட்​டான்​னா, நம்ம சீனே கெட்​டுப் போகும்” என்று சொல்​லி​யிருக்​கிறார் இயக்​குனர். அப்​போது என் நண்​பர், “இல்ல சார், அவன் திறமை பத்தி எனக்கு தெரி​யும். நீங்க எடுங்க, அவன் சரியா நடிக்​கலைன்னா அதே லொகேஷன்ல எடுக்க வேண்​டிய வேற சீன்ஸ் இருக்​கு. அதை எடுத்​துக்​கலாம்” என்று சொன்​னார். அவர் நம்​பிக்​கையே இல்​லாமல், “என்​னமோ சொல்​றீங்க; ரைட்​டு” என்று சொல்லி விட்​டார்.

எனக்கு தகவல் கிடைத்​ததும் உடனடி​யாக போனேன். நான் நடிக்க ஆரம்​பித்​தேன். என்​னுடன் நடித்​தவர் புகழ்​பெற்ற நடிகர். இன்​றும் என்​னுடன் தொடர்​பில் இருக்​கிறார். நான் ஆசை​யாக மாமா என்று அவரை அழைப்​பேன். நடித்து முடித்​ததும், “மச்​சான், நீ நடிக்​கிற மாதிரிலாம் என்​னால நடிக்​கவே முடி​யாது, அந்த மாதிரி பாஷையே பேச முடி​யாது​டா” என்று பாராட்​டி​னார்.

இதற்​கிடையே அவர் இயக்​கிய இன்​னொரு படத்​தி​லும் ஒரு பெரிய நடிகை​யுடன் நடித்​தேன். அப்​போது என் நண்​பருக்​கும் அந்த இயக்​குனருக்​கும் ஏதோ முரண்​பாடு ஏற்​பட்​டு, அதற்​காக நான் நடித்​திருந்த காட்​சிகளை படங்​களி​லிருந்​தும் வெட்​டி​விட்​டார். இதை கேள்வி பட்​டதும் எனக்கு தூக்​கம் வரவில்​லை. கவலை​யாக இருந்​தது. மறு​நாள் போய் அவரிடம் கெஞ்சி கேட்​கலா​மா? என்று யோசித்​தேன்.

“நல்ல வேடங்​கள் நடித்​திருக்​கிறேன், அவர்​கள் சண்​டை​யில் என் காட்​சிகளை ஏன் நீக்க வேண்​டும்?” என்று எனக்கு கோபம். பிறகு வழக்​கம் போல நண்​பரின் வீட்​டுக்கு ஒரு நாள் போன​போது, அவர் என்​னைப் பார்த்து அழ ஆரம்​பித்​து​விட்​டார். “எனக்​கும் அவருக்​கு​மான சண்​டை​யில், நான் சொல்லி நடிக்க வைத்​த​தால் உன் காட்​சிகளை வெட்டி விட்​டார்” என்று வருத்​தப்​பட்​டார். “விடு நண்​பா, நமக்​குன்னு ஒரு நேரம் வரும்” என்று அவரிடம் கூறி விட்​டு, அதை சவாலாக எடுத்​துக் கொண்​டேன்.

பிறகு அந்த இயக்​குனரை சந்​தித்​த​போது, “படத்​தோட கதைக்கு நீங்க நடிச்ச சீன் ஒட்​டலை, அதனால நீக்​கிட்​டேன். அடுத்த படத்​துல நல்ல கேரக்​டரா தர்​றேன்” என்​றார்.

பிறகு என் நண்​பரிடம், “ரெண்டு கண்​ணை​யும் பிடுங்​கிட்டு ரேபான் கிளாஸ் வாங்​கித் தாரேன்னு சொன்​னவரு உங்க டைரக்​டர்​தான்​யா” என்று சொல்​லிச் சிரித்​தேன்.

அதற்​குப் பிறகு, அந்த இயக்​குனருக்கு வாய்ப்​பு​கள் இல்​லாமல் போய் விட்​டது.

பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் ஒரு படத்​திற்​காக எனக்கு போன் பண்​ணி, “ஒரு படம் பண்ண வாய்ப்பு கிடைச்​சிருக்​கு... என்ன சம்​பளம் வாங்​குறீங்​க?” என்று கேட்​டார். நான் அந்த நேரத்​தில் வாங்க்​கிக்​கொண்​டிருந்த தொகை​யைச் சொன்​னேன். “சரி, எனக்​காக என்ன பண்​றீங்க? என்று கேட்​டார். “உங்​களுக்​காக வேணும்னா இந்​தப் படத்​துல நடிக்​காம இருக்​கேன்” என்று சொன்​னேன். அவருக்கு ஒரு மாதிரி​யாகி​விட்​டது. உடனே, “இன்​னும் பழசை மறக்​கலை போலிருக்​கு” என்​றார்.

“பழசை மறக்​கக் கூடாதுன்​னு​தானே எல்​லோரும் சொல்​லிட்டு இருக்​காங்க” என்​றேன். அதற்கு பிறகு அந்த இயக்​குநர் அந்த படம் இயக்​க​வில்​லை. அவரை நான் சந்​திக்​க​வும் இல்​லை. இது​போல பல இயக்​குநர்​கள், புரொடக் ஷன் மானேஜர்​கள் என்னை அவமானப்​படுத்தி இருக்​கிறார்​கள். “சினி​மாவுல நீ ஒண்​ணும் சாதிக்​கவே முடி​யாதுய்​யா” என்று சொன்​னவர்​கள் அதி​கம். அதை நான் சவாலாகவே எடுத்​துக் கொண்​டேன்.

ஏவி.எம் கார்​டனில் ஒரு படத்​தின் ஷூட்​டிங். அப்​போது புகழ்​பெற்ற இயக்​குந​ராக இருந்​தவர் படம் இயக்​கிக் கொண்​டிருந்​தார். அவரிடம் நான் தவழ்ந்து போகாத குறை​யாகச் சென்று வாய்ப்பு கேட்​டேன். பக்​கத்​தில் இருந்​தவர்​களிடம் என்னை காட்டி கிண்​டலாக சிரித்​தார். அவர் சிரிப்​பதை பார்த்து அங்​கிருந்​தவர்​களும் சிரித்​தார்​கள். நான் நின்று கொண்டே இருந்​தேன்.

அவர் சொன்​னார், “நீ, ஏவி.எம்ல இருந்து வெளிய போ, வடபழனி பஸ் ஸ்டாண்ட் வரும். அப்​படியே நடந்தா வடபழனி கோயில் வரும். அந்த லெஃப்டை விட்​டிரு. அதுக்​கடுத்த லெஃப்ட்​டை​யும் தாண்டி போனா, சலாம் ஸ்டோர்னு ஒரு கடை வரும். அங்க போயி ஒரு அரை கிலோ வேஷம் வேணும்னு கேட்டு வாங்​கிட்டு வா” என்று நக்​கலாக சொல்லி சிரித்​தார்.

அதே இயக்​குநர், நான் பிசி​யாகி​விட்ட காலத்​தில், நான் நடித்த எந்த படம் ரிலீஸ் ஆனாலும் அதைப் பார்த்​து​விட்டு எனக்கு போன் பண்ணி பாரட்​டு​பவ​ராக இருந்​தார். இதே போல மற்​றொரு பெரிய இயக்​குனர் அவரிடம் வாய்ப்பு கேட்​கும்​போது, “நான் எல்​லாம் படம் எடுத்து பிழைக்​கிறது உனக்கு பிடிக்​கலை​யா?” என்று கிண்​டலாகக் கேட்​டார். அப்​போது அவருடைய அசோசி​யேட் அவரை பார்த்​து, “இவரை பத்தி உங்​களுக்​குத் தெரியல.

அவன் திறமை என்​னன்னு நான் அளந்து வச்​சிருக்​கேன். ஒரு காலத்​துல பெரிய நடிக​னாக வரு​வான்​. அப்​ப நீ போயி ​கால்​ஷீட்​ கேட்​பே, அவன்​ இல்​லைன்​னு சொல்​​வான்​” என்​று என்​ மீ​தான நம்​பிக்​கை​யில்​ சொன்​​னார்​. பிறகு அதே போல அழைத்​​தார்​. அப்​போது சீரியலில்​ பிசி​யாக இருந்​தேன்​. என்​​னால்​ ​கால்​ஷீட்​ கொடுக்​க முடியவில்​லை.

(திங்​கள்​தோறும்​ பேசுவோம்)

SCROLL FOR NEXT