

நாங்கள் சென்னை வந்த போது, நடிப்பதற்காக வாய்ப்பு தேடிய என் அக்காவை டப்பிங் பக்கம் திருப்பியது நடிகர் செந்தாமரை அப்பாதான் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஆர்எம்.எஸ்.உதயபாஸ்கரன் என்ற என் பெயரை நியூமராலஜி படி எம்.எஸ்.பாஸ்கர் என்று மாற்றி வைத்ததும் அவர்தான்.
என் அக்கா டப்பிங்கில் பிசியாக இருந்த போது நானும் அவருடன் செல்வேன். அப்போது யார் யார் டப்பிங் பேசுகிறார்களோ, அவர்களை போல நானும் மனதுக்குள் பேசிப் பார்ப்பேன். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.
டப்பிங் பேசுவது என்பதும் நடிப்புதான். குரலை ஏற்ற இறக்கத்துடன் பேசி நடிப்பது போன்றது என்பதால் எனக்குள் நடிப்பு ஆசை இயல்பாகவே வந்து விட்டது. பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கு நானும் டப்பிங் பேச ஆரம்பித்தேன்.
கே.விஜயன் இயக்கத்தில் சிவகுமார் அண்ணன் நடித்த ‘ஆணிவேர்’ (1981) படத்தில், சின்னவயது சிவகுமாருக்கு நான் டப்பிங் பேசினேன். அப்படியே பேசிக்கொண்டிருந்தாலும் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். அதிலிருந்து விலகி மறுபடியும் டப்பிங் பணிக்கு வந்தேன்.
ஆரூர்தாஸ், மருதபரணி, எம்.ஏ.பிரகாஷ், அமரர் தேவ நாராயணன் ஆகியோர் படங்களில் பேச ஆரம்பித்தேன். அப்படி இருக்கும் போது இயக்குநர் ‘பசி’ துரை அவர்களின் படங்களில் பேச வாய்ப்பு கிடைத்தது. அவர் நன்றாக பழகினார்.
அப்போது அவர் வீட்டுக்குத் தினமும் காலையில் சென்று நிற்பேன். எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று உரிமையாகக் கேட்பேன். அவரும் சரி என்பார்.அப்படி ஒரு நாள் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.
இத்தனை நாள் கனவு நனவாக போகிற ஆசையில் சென்றேன். சின்ன கேரக்டர்தான். திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் படப்பிடிப்பு. அங்குதான் கேமரா முன்னால் முதன் முதலாக நின்றேன். அந்தப் படம் ‘புனித மலர்’. அதில் ஒய்.ஜி.மகேந்தி ரன், ‘ஒருதலை ராகம்’ ரவீந்தர் எல்லோரும் நடித்துக் கொண்டிருந்தார்கள்.
(என் தலையில் முடி இருந்த காலம் அது.) நான் கல்லூரி மாணவனாக நடித்தேன். தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் எடுத்தார்கள். இரண்டு மொழியிலும் நானே டப்பிங் பேசுவேன் என்று பேசினேன். என்ன காரணத்தாலோ அந்தப்படம் வெளியாகவில்லை. என் முதல் படம்வெளியாகாததால் வருத்தமாக இருந்தது.
பிறகு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. டப்பிங்குக்கு வந்துவிட்டேன். இயக்குநர் விசு அண்ணாவின் படங்களுக்கு டப்பிங் பேசும்போது, நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று அவருக்குத் தொல்லை கொடுப்பேன். அவர் இயக்கத்தில் உருவான ‘திருமதி ஒரு வெகுமதி’ (1987) படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். நான் நடித்து வெளியான முதல் திரைப்படம் அதுதான்.
செந்தாமரை, விசு, ‘பசி’ துரை
அதிலும் கல்லூரியில் ஈவ் டீஸிங் செய்யும் மாணவனாக நடித்திருப்பேன். இந்த படத்துக்கு பிறகும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. டப்பிங்தான் பேசிக் கொண்டிருந்தேன். மக்கள் என் பக்கம், காவல் கீதம், சேலம் விஷ்ணு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தேன். பிறகு டி.வி.சீரியல் வாய்ப்பு வந்தது.
மகிழ்ச்சியாக அதில் நடிக்கத் தொடங்கினேன். அப்போது டி.வி.சீரியலில் நடித்துக் கொண்டிருப்பவர்களை தனது படத்தில் நடிக்க வைக்கலாம் என்று இயக்குநர் அழகம்பெருமாள், ‘டும் டும் டும்’ படத்தில் டாக்டர் வேடத்தில் என்னை நடிக்க வைத்தார்.
அதில் திருநெல்வேலி பேச்சுவழக்கில் பேசி நடித்திருப்பேன். அதை அழகம் பெருமாள் ரொம்ப ரசித்தார். அதற்குப் பிறகு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் சினிமாவில் வாய்ப்புகள் குறைவாகத்தான் வந்தன! வந்த சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டு சீரியலையும் தொடர்ந்து கொண்டிருந்தேன்.
அப்போது ஓர் இயக்குநர் பாஸு, “நீ நல்லா நடிக்கிறே, சீரியல், சினிமான்னு ரெண்டுலயும் பண்ணிட்டிருந்தா, சினிமாவுக்கு கூப்பிட மாட்டாங்க. சினிமாவுல பிசியாகணும்னா, நீ இந்தப் பக்கமே வந்துரு. ஏதாவது மெகா தொடர்ல மாட்டிக்கிட்டா, கால்ஷீட் பிரச்சினை வரும்” என்று சொன்னார். அது சரியென்று பட்டது. அதற்கு பிறகு சினிமா பக்கம் முழுமையாக வந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் வந்து, என்னை நிலை நிறுத்தின.
அதற்கு எனக்கு வாய்ப்புக் கொடுத்த, கொடுக்கின்ற, கொடுக்க இருக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், புரொடக் ஷன் மானேஜரில் இருந்து அனைவருடைய ஆதரவிலும்தான் இப்போது தேசிய விருது வாங்கும் அளவுக்கு வந்திருக்கிறேன்! அவர்களுக்கு எப்போதும் என் நன்றிகள்உண்டு.
என் அக்காவை டப்பிங் லைனில் திருப்பி, எனக்கு அதன் மூலம் வாய்ப்பு கிடைத்து நான் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு செந்தாமரை அப்பாவின் ஆசிர்வாதமும் காரணம் என்பதை என்னால் மறக்க முடியாது.
(திங்கள்தோறும் பேசுவோம்)