சென்னை நசரத்பேட்டையில் வீடு கட்டும் போது அங்கு எனக்கு ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது எனக்கு அங்கு அறிமுகமானவன் அந்தப் பகுதி வார்டு மெம்பராக இருந்த திமுக-வைச் சேர்ந்த ஏழுமலை. அன்றிலிருந்து என்னை அடிக்கடி ‘நைனா’என்று அழைக்க ஆரம்பித்தான்.
நான் எங்கு போனாலும் என்னை நிழலாகத் தொடர்ந்தான். ராமானுஜரின் தீவிர பக்தன். இருவரும் பல கோயில்களுக்கு ஒன்றாக சென்றிருக்கிறோம். எனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு விழுப்புரம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் அதிகாலையில் திருமணம். அங்கு போக வேண்டும்.
அதிகாலை 1 மணிக்கு கிளம்ப வேண்டும் என்று சொன்னேன். வந்தான். இப்படி எங்கு வேண்டுமானாலும் ஒன்றாக செல்வோம். “நான் இங்கயே பிறந்து வளர்ந்தவன், ஆனா மெட்ராஸ் பாஷையை உன்னை போலப் பேச முடியல, நைனா” என்று சொல்வான்.
என்னருகில் யாராவது இருக்கும்போது, சினிமா நிறுவனங்களில் இருந்து போனில் நடிக்க அழைத்தால், சம்பளம் பேச மாட்டேன். ஆனால், ஏழுமலை என் அருகில் இருந்தால் பேசுவேன். எதிர்முனையில் பேசுகிறவர், “இவ்வளவு ரூபா தர்றேன்” என்று சொல்லும்போது, இவன் சரி என்று கையை காண்பித்தால், ஓகே என்று சொல்லிவிடுவேன்.
வேண்டாம் என்று தலையை ஆட்டினால், ‘அந்த சம்பளத்துக்கு பண்ண முடியாது” என்று மறுத்துவிடுவேன். அவனுக்கு என் மீது அவ்வளவு உரிமை! அவனுக்கு நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இயக்குநர் ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய முரளி வின்சென்ட் அவர்கள் இயக்கிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன்.
என்னுடன் வருவது போன்ற கதாபாத்திரம். என் நடிப்பை பார்த்துவிட்டு, “என்ன நைனா, இப்படி நடிக்கிறியே நைனா” என்று வியந்து பேசுவான். நான் “எவரெஸ்ட் கலைஞர் ஏழுமலை” என்று அவனைக் கிண்டல் செய்வேன். திமுக மீது பற்றுக்கொண்டவன் என்பதால் முதல்வர் ஸ்டாலின் அண்ணனை பார்க்கச்செல்லும் போது அவனையும் அழைத்துச் செல்வேன்.
அமைச்சர் சேகர்பாபு ஏதாவது விழாக்கள் நடத்தினாலும் செல்லும்போது அழைத்துச்செல்வேன். விழாக்களில் கொடுக்கக்கூடிய சால்வை, பூச்செண்டு போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்வான். நான் எங்கு போனாலும் மேடையில் அவனுக்கும் ஒரு சேர் போட்டு உட்காரச்சொல்வேன்.
கோயிலுக்கு போகும்போது மரியாதை நிமித்தமாக எனக்கு மாலை போட்டால் அவனுக்கும் போடச் சொல்வேன். வேறு ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எனக்காக கடவுளால் அனுப்பப்பட்ட மகன் அவன். என்னை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் அவனிடம் பேசி, “பாஸ்கர் சாரை பார்க்கணும், டைம் வாங்கி கொடுங்களேன்” என்பார்கள்.
அந்தளவுக்கு என்னிடம் நெருக்கமாக இருந்தான். எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவன் ஏழுமலை. நான் தேசிய விருது வாங்கியதும் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டான். “எதுக்குப்பா இதெல்லாம் என்று கேட்டேன். “சும்மாரு நைனா” என்று சொல்லிவிட்டான்.
அந்தளவுக்கு என் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டவனாக இருந்தான். நானும் அவன் மீது பாசம் கொண்டவனாக இருந்தேன். அவன் எனக்கு ஒரு தோழன், இதைச்செய்யாதே என்று சொல்கிற மந்திரி, இதை இப்படிப் பண்ணு என்று சொல்லிக்கொடுப்பதில் ஓர் ஆசிரியர், எல்லோருக்கும் அன்னதானம் வழங்குவதில் ஆண்டவன்; நான் சொல்கிற வேலைகளைச் செய்வதில் அவன் சேவகன் என இருந்தான்.
ஏழுமலை
நல்லகண்ணு ஐயா பற்றிய ஆவணப்படம் ஒன்றில் நான் நடித்தேன். “என்னை கைத்தாங்கலாக பிடித்து அழைத்துக் கொண்டு வருவது போல் ஒரு கதாபாத்திரம் வைங்க. ஏழுமலை அதில் நடிக்கட்டும்” என்று சிபாரிசு செய்தேன். இயக்குநர் சரி என்று சொல்லிவிட்டார்.
2026 மார்ச் 7-ம் தேதி படப்பிடிப்பு. இரவில் என் காரில் ஏறிய ஏழுமலையின் முகம் சோர்வாக இருந்தது. என்னாச்சுப்பா என்று கேட்டேன். “காலைலேர்ந்து என்ன சாப்பிட்டாலும் வாந்தி எடுக்குது” என்றான். அவன் மனைவியும் “உடம்பு சரியில்லைன்னா ஏன் வெளிய போறீங்க?” என்று கேட்டிருக்கிறார்.
“பாஸ்கர் நைனா கூட நடிக்கப்போறேன்” என்று சொல்லி விட்டு வந்தான்! பிறகு மெடிக்கல் ஷாப்பில் ஒரு மாத்திரை வாங்கி போட்டுக்கொண்டான். பெசன்ட் நகர் சென்றோம். வழக்கமான சுறுசுறுப்பு அவனிடம் இல்லை என்பதைக் கவனித்தேன். வாந்தி காரணமாக அப்படி இருக்கிறது என நினைத்தேன்.
பீச்சில் படப்பிடிப்பு. ஏழுமலையை அழைத்தேன். “எனக்குத் தூக்கம் வருது, நீ போயிட்டு வா நைனா” என்று சொல்லிவிட்டான். பிறகு அவனுக்கு வாமிட் வந்தது. மூக்கிலும் வந்தது. தண்ணீர் கொடுத்து முகத்தைக் கழுவச்சொல்லி விட்டு ஷாட்டுக்கு சென்றேன்.
இரவு 1 மணிக்குத்தான் படப்பிடிப்பு தொடங்கியது. விடியற்காலை 3.30க்கு ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஏழுமலையை தேடினால் காணவில்லை. பிறகு அப்பகுதியைச் சேர்ந்த எனக்குப்பழக்கமான ஜெகன் என்ற தம்பியிடம் சொல்லி தேடச்சொன்னேன். சிறிது தூரத்தில் போய் படுத்திருந்தான் ஏழுமலை.
பிறகு அவனை உசுப்பி காரில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு திரும்பினேன். “நாளைக்கு ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிடட்டா?” என்று கேட்டான். “முடியலைன்னா அட்மிட் ஆயிடு என்றேன்! பிறகு முகலிவாக்கம் அருகே வரும் போது அங்கு ஒரு மருத்துவமனை பெயரை சொல்லி” இங்க எனக்கு ஒரு அட்மிஷன் போட்டுடுறியா நைனா” என்று கேட்டான்.
“நம்ம ஏரியாலேர்ந்து இது ரொம்ப தூரம். வீட்டுக்கு போயிடலாம். காலைல பக்கத்துல ஏதாவது ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிரு” என்று சொல்லிவிட்டு அவன் மனைவிக்கு போன் செய்து, “இவன் தலை சுத்துதுங்கறான். கீழ விழுந்திட போறான். கூட்டிட்டுப் போறதுக்கு வீட்டுக்கு வெளியில வந்து நில்லு ” என்று சொன்னேன்.
அதே போல அவரும் வந்தார். “சரி, நைனா பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனான். நான் விடியற்காலை 4.45-மணிக்கு அவன் வீட்டு வாசலில் இறக்கி விட்டு என் வீட்டுக்கு வந்து 5.30 மணிக்கு படுத்தேன்! காலையில் 7 மணிக்கு போன் அடித்தது. எனக்கு கனவில் அடிப்பது போல் இருந்தது.
தூக்கக்கலக்கத்தில் இருந்தேன். போனில் ஏழுமலை மனைவி அழைத்தார். “அங்கிள், அவரை ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம். பிட்ஸ் வந்துருச்சு” என்றார். “வாமிட், நெஞ்செரிச்சல்னுதானே சொன்னான்” என்று கேட்டேன். “ஐசியூ-வில் சேர்க்கச் சொல்கிறார்கள்” என்றார்.
“சரி, உடனே வருகிறேன்” என்று சொல்லி கிளம்பிக் கொண்டிருந்தேன். அடுத்த 10 நிமிடத்தில் மீண்டும் போன். “அங்கிள் அவர் இறந்துட்டார்” என்று அழுகுரலோடு அவன் மனைவி சொன்ன போது என் தலையில் இடி விழுந்தது போல் நிலை குலைந்தேன்.
இப்போதும் என் நெஞ்சை அறுக்கிற விஷயம், அவன் முகலிவாக்கம் மருத்துவமனையில் சேர்க்கச் சொன்னதும் சேர்த்திருந்தால் பிழைத்திருப்பானோ?என்பதுதான். இவ்வளவு சீரியசான விஷயமாக அதை நான் நினைக்காதது என் தவறுதானோ? என்று என்னை நானே நொந்து கொண்டிருக்கிறேன்.
அவனும், “என்னால முடியலை நைனா, இங்கயே சேர்த்திரு” என்று சொல்லியிருக்கலாமே என்றெல்லாம் மன வேதனையில் துடிக்கிறேன். சுடுகாட்டில் என் மன வேதனையை சொல்லி நான் கதறிய போது அங்கு ஏழுமலைக்கு என்னைப்போல் மிக நெருக்கமானவர்கள் ‘நீங்கள் அங்கு சேர்த்து அவன் இறந்திருந்தால் இங்கு சேர்த்திருக்கலாம், அங்கு சேர்த்திருக்கலாம்” என்று உங்கள் மீது பழி சொல்லியிருப்பார்கள்.
அவன் நம்மை விட்டு செல்ல வேண்டும் என்பது இறைவன் சித்தம். அழாதீங்கண்ணா” என்று என்னை தேற்றினார்கள். படிக்காத மேதை பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. ஏழுமலை எனக்கு நண்பனாய், மந்திரியாய், ஆசிரியனாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய் என்னோடு இருந்த என் நிழல்.
என் நிழல் என்னை தவிக்க விட்டு பிரிந்துவிட்டது. இப்போதும் இரவெல்லாம் என் வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கிறேன். புல்லட்டில் வந்து ‘நைனா...’ என்று அவன் அழைப்பது போலவே தோன்றுகிறது.
இனி எப்போது, எந்த ஜென்மத்தில் பார்ப்பேன் நான் பெறாத மகன் ஏழுமலையை? அடுத்த பிறப்பில் அவன் எனக்கு மகனாக பிறக்க வேண்டும். ‘நைனா’ என்று அழைக்க வேண்டும் என்று ஆண்டவனை கண்ணீரோடு வேண்டுகிறேன். வேண்டிக்கொண்டே இருப்பேன். போய் வா மகனே!
(திங்கள்தோறும் பேசுவோம்)