வீடு என்பது வீடல்ல. அது விவரிக்க முடியாத ஓர் உணர்வு. எங்கெங்கோ சுற்றி விட்டு வந்து வீட்டுக்குள் கால் வைக்கும் உணர்வில் மனம் நிறைந்துவிடும். அப்படியொரு மகிழ்ச்சியை, இனிமை உணர்வை பெரும்பாலானவர்களுக்கு வீடுகளே கொடுக்கின்றன.
எனக்கும் அப்படித்தான்! நான் பிறந்தது நாகப்பட்டினத்தில் உள்ள காடம்பாடி. நாகப்பட்டினத்தில் இருந்து நாகூர் செல்லும் வழியில் இருக்கிறது இந்த ஊர். அப்பாவை ஆர்.எம்.எஸ் என்பார்கள், அவருக்குகே.எம்.எஸ் என்ற இஸ்லாமிய நண்பர் இருந்தார்.
அந்த கே.எம்.எஸ்.ஸின் பங்களாவில்தான் நான் பிறந்தேன் என்று சொல்வார்கள். பிறகு வெளிப்பாளையத்தில் மாரியம்மன் கோயில் தெருவில்தான் வளர்ந்தேன். என் சிறு வயது அங்குதான் கழிந்தது.
அங்கு அப்பா கட்டிய வீட்டுக்கு என்பெயரைத்தான் வைத்தார், ‘பாஸ்கர பவனம்’ என்று. அதை விற்றுவிட்டு நாங்கள் சென்னைக்கு வரும்போது, அந்த வீட்டை ஏக்கமாக பார்த்து நின்ற நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன.
இப்போதும் அந்த வீடு அங்கு இருக்கிறது. நான் அந்த பக்கமாக படப்பிடிப்புக்காக செல்ல நேர்ந்தால் அந்த வீட்டை பார்த்து விட்டு வருவது வழக்கம். அதில் இன்னும் இருக்கும் ‘பாஸ்கர பவனம்’ பெயரை பார்த்ததும் எனக்குள் ஏற்படும் மகிழ்ச்சியை விவரிக்க முடியாது.
பிறகு நாங்கள் சென்னைக்கு வரும்போது, ராயப்பேட்டை அம்மையப்ப முதலி தெருவில் உள்ள 41-ம் எண்ணில் ஒரு போர்ஷனில் குடியிருந்தோம். அந்த வீடும் எனக்குப் பிடித்த ஒன்று. பிறகு சொந்த வீடு வாங்க நினைத்து, சின்னப்போரூரில் ஒரு வீட்டை வாங்கினோம்.
1.25 கிரவுண்ட் இடத்தில் 550 சதுர அடியில் அந்த வீடு இருந்தது. 1982-ல் அந்த வீட்டை வாங்கும் போது அதன் மதிப்பு, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். பிறகு அங்கிருந்து வேறு வீட்டுக்கு குடிபெயர வேண்டி வந்தது. அதனால் அந்த வீட்டை ரூ.88 லட்சத்துக்கு விற்றோம்.
அந்தப் பணத்தில் பாதிக்கு மேல் என் தம்பிக்கு கொடுத்துவிட்டு, மீதியை என் சகோதரிகளுக்கு கொடுத்துவிட்டு, என் பங்கு 14 லட்சம் ரூபாயில் விருகம்பாக்கத்தில் லீசுக்கு ஒரு வீட்டுக்கு வந்தேன்.
என் வாழ்க்கையில் இன்னொரு பங்காகஇருந்த அந்த சின்னப்போரூர் வீடு, இப்போது ராவணன் குடில் என்ற பெயரில் என் பங்காளி சீமானின் கட்சி அலுவலகமாக இருக்கிறது. இப்போதும் அங்கு சென்றால், அந்த வீட்டைப் பார்த்துவிட்டு வருவது உண்டு.
பிறகு விருகம்பாக்கத்தில் லீசுக்கு வசித்த வீட்டு உரிமையாளரின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. அவருக்கு இன்னும் அதிகம் பணம் தேவைப்பட்டது. கொடுத்துவிட்டு அங்கு வசித்தோம். பிறகு அவருக்கு அந்த வீட்டை விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
நான் வாங்கும் நிலைமையில் இல்லை. பிறகு சாலிகிராமம் விநாயகம் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு வாங்கினேன். அதுஎன் பெயரில் இன்னும் இருக்கிறது.
இப்போது நசரத்பேட்டையில் அகரமேல் பகுதியில் இடம்வாங்கி கட்டிய வீட்டில் வசித்து வருகிறேன். என் மகன் நடிகர் ஆதித்யா பாஸ்கரும், என் மாப்பிள்ளை அகுலும் பிளான் செய்து இந்த வீட்டை கட்டினார்கள்.
வீடு தொடர்பான எனது இந்த பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர் என் மனைவி ஷீலா பாஸ்கர். சின்னப்போரூர் வீட்டில் இருந்தபோது நாங்கள் சந்திக்காத சோதனைகள் இல்லை. அதில் எல்லாம் நம்பிக்கையோடு இருந்தவர் என் மனைவிதான். அந்த வீட்டை விற்றபோது “ஆண்டவன் நம்மை இப்படி துரத்திட்டாரே” என்று என் மனைவி அழுதார்.
“துரத்தினால் நல்ல இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்என்று அர்த்தம். கவலைப் படாதே” என்று சொன்னேன். பிறகு விருகம்பாக்கம் வீட்டில் இருந்து மாற வேண்டி வந்தபோதும், என் மனைவி அழுதார். அப்போது என் மகள் ஆறாவது படித்துக் கொண்டிருந்தார்.
அவர், “ஏம்மாஅழறீங்க. அப்பா என்ன நம்மள தெருவுலயா விட்டிருவாங்க. கவலைப் படாதீங்க” என்று தைரியம் சொன்னார். பிறகு விநாயகம் தெருவுக்கு போன போது, அங்கு எனக்கு உதவியவர் நான் மாமாஎன்று அன்போடு அழைக்கக் கூடிய நரேந்திரன்.
அவர்தான் பிளாட்டை விற்றவரிடம், எனக்குக் காசு இல்லாத நேரத்திலும் அந்த வீட்டை என் பெயருக்குப் பத்திரப்பதிவு செய்து கொடுக்கச் சொல்லிப் பேசியவர். பிறகு என் கெருகம்பாக்கம் வீட்டை விற்றும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்தும் வாங்கினோம்.
இதுதான் என்னுடைய வீடு அனுபவம்! இப்போது நான் வாங்கியிருக்கும் நசரத்பேட்டை வீட்டை, சின்னப் போரூர் வீட்டில் இருந்து என்னுடன் பயணித்து வருகிறஎன் மனைவியின் பெயரில்தான் வாங்கியிருக்கிறேன்.
இந்த வீட்டை வடிவமைத்து கட்டியதில் என் மகன் ஆதித்யா பாஸ்கருக்கும் என் அன்பு மாப்பிள்ளைக்கும் பெரிய பங்கு உண்டு. எனக்குப் பெண் குழந்தைகள் மீது அதிக ஆசை உண்டு. பெண்களை நான் சக்தியின் வடிவமாகப் பார்க்கிறேன்.
என் மனைவியையும், மகளையும் சரி, என் பேத்தியையும் என் சகோதரிகளையும் அப்படித்தான் பார்க்கிறேன். என்னை அப்பா என்றழைக்கிற பெண் குழந்தைகள் அனைவரும் என் குழந்தைகள்தான். என் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர், இப்போது பல கதாநாயகிகளுக்குபின்னணி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர் மகன் ஆதித்யா பாஸ்கர். அவரும் இப்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இறைவன் அருளால் எனக்கு பேத்திதான் வேண்டும் என்று கேட்டு, மகள் வழியாக அகிரா என்ற பேத்தி இருக்கிறார்.
என் மனைவி, இந்த வீடு, மக்கள், என்னுடைய சம்பந்தி, சுற்றத்தார் எல்லோருமே எனக்கு இறைவன் கொடுத்த வரம் போல அமைந்தார்கள். என் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு செங்கல்லிலும் என்னை உயர்த்திய, என்னை ஆதரிக்கும் தமிழ் ரசிக பெருமக்கள் கொடுத்த சன்மானத்தையே பார்க்கிறேன்.
இந்த வீடு கட்டும் விஷயத்தில் எனக்கு சமயத்தில் பண உதவி செய்து பேருதவி செய்தவர் என் அன்புத்தம்பி இயக்குநர் ஏ.எல்.விஜய் அவர்கள். இவையே உண்மை. இதே ஆதரவை நான் நடிக்கின்ற காலம் வரை மட்டுமல்லாமல், வாழ்கின்ற காலம் வரை ரசிகப்பெருமக்களும், பத்திரிகை ஊடக நண்பர்களும் தர வேண்டும் என்பதுதான் என் ஆசை.
(திங்கள்தோறும் பேசுவோம்)