என்னிடம் மானேஜராக இருந்தவர், தம்பி அருணாச்சலம். அவர் நிறைய விஷயங்களில் என்னிடம் ஆலோசனை கேட்பார். நானும் அவரிடம் கேட்பேன். தொழில் விஷயமானாலும் சரி, குடும்பம் தொடர்பாகவும் சரி. எனக்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்த போது, அவர் ஒரு முகவரை அனுப்பினார். அவர் பெயர் செபாஸ்டியன் இன்பராஜ்.
அவர் மனைவி புனிதா. மகன் பெயர் நைஜில், மகள் இன்பென்டா. இன்சூரன்ஸ் ஏஜென்டாக அறிமுகமான செபாஸ்டியன், பிறகு என் குடும்பத்துடனும் என்னுடனும், என் உடன் பிறந்த தம்பி மாதிரி ஒட்டிக் கொண்டார். எனக்கு எந்த வேலை என்றாலும் சரி, அவர் கவனித்துக் கொள்வார். நான் இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தேன்.
அதன் வாடகை, அதில் ஏதும் ரிப்பேர் செய்ய வேண்டும் என்றாலும் அதுதொடர்பான அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொள்வார். எனக்கு எல்லா விஷயங்க ளிலும் அவர்தான் உறுதுணை.
சில சிறுகதைகளை நான் என் குரலில் பேசி வெளியிட்டிருக்கிறேன். லால்குடி சாது ராம் என்பவர் கதைகளை எழுதி அனுப்புவார். நான் அதை சரி செய்து படிப்பேன். அப்படி அவர் அனுப்பிஇருந்த ஒரு கதைக்கு ‘அப்பா- மகள்’ என்று தலைப்பு வைத்து அதில் வரும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு செபாஸ்டி யன் இன்பராஜ் என்ற பெயரை வைத்திருந்தேன்.
அவர் மனைவிக்கு புனிதா என்ற பெயரையும் மகளுக்கு இன்பென்டா என்றும் வைத்தேன். அதை அவருக்கு அனுப்பி வைத்ததும் அதைக் கேட்டுவிட்டு போனில் அழ ஆரம்பித்துவிட்டார். “ஏன் அழறீங்க தம்பி? இது சின்ன மேட்டர்தானே?” என்று சொன்னேன்.
பிறகு வீட்டுக்கு வந்து என் மனைவியிடம், “அண்ணி, எவ்வளவு பெரிய கவுரவத்தை அண்ணன் எனக்கு கொடுத்திருக்காங்க” என்று கண்கலங்கினார். “அவர் குரூப்பில் எல்லோருக்கும் அனுப்ப அனைவரும், “என்னடா.. உன் அண்ணன் உன் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கார் என்று சொன்னார்கள்” என்றார்.
செபாஸ்டியன் இன்பராஜ்
எல்.ஐ.சி-யில் அவர் ஏஜென்டாக இருந்தார். அவர் ஆபிஸில் ஏதாவது பங்ஷன் என்றால் அவரிடம் என்னை அழைத்து வரச்சொல்வார்கள். நானும் செல்வேன். அவர் மூலமாக என் குடும்பத்தில் அனைவருக்கும் இன்சூரன்ஸ் போட்டிருக்கிறேன்.
அவர் ஒவ்வொரு வருடமும் விரதம் இருந்து திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வார். செல்லும் முன் “அண்ணே, உங்களை பார்க்கணும்ணே” என்று வீட்டுக்கு வந்துவிடுவார். நான் நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி பூசியிருந்தாலும் அவர் என் முன் மண்டியிடுவார்.
நான் தேவாலயங்களில் ஃபாதர்கள் சொல்வது போல அவருக்கு ஆசி வழங்கி, நெற்றியில் சிலுவை போட்ட பின்தான் கிளம்புவார். இதை எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால், மதங்களை கடந்து நாங்கள் அண்ணன் - தம்பியாக இணைந்திருந்தோம் என்பதற்காகதான்.
“அண்ணே, நான் கடைசி வரைக்கும் உங்களுடன் இருப்பேன் அண்ணே. என்ன பிரச்சினை என்றாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்கிற தம்பி அவர். ‘விந்தை’ என்ற படத்தின் படப்பிடிப்பு போரூரில் நடைபெற்ற போது “நான் ஷூட்டிங் வரலாமாண்ணே?” என்று கேட்டார். ““என்ன தம்பி இப்படி கேட்கி றீங்க, வாங்க” என்றேன்.
வந்தார். நான் நடிப்பதை வியந்து பார்த்துக் கொண் டிருந்தார். நாங்கள் பழனி கோயிலுக்குப் போன போது மகன் நைஜிலை அழைத்துக்கொண்டு எங்களுடன் வந்துவிட்டார். நாங்கள் வேளாங்கண்ணி போனால், தீர்த்தம் வாங்கி வந்து அவருக்கு கொடுப்போம். அவரும் அப்படி செய்வார். எங்கள் இருவருக்குள்ளும் பெரிய பிணைப்பு இருந்தது.
நான் நசரத்பேட்டைக்கு குடிவந்த பிறகு, தூரமாக இருப்பதால் அவர் என் வீட்டுக்கு வருவது குறைந்துவிட்டது. ஆனாலும் எனக்கு செய்யும் உதவிகளை செய்து கொண்டே இருந்தார். பிறகு “வேறு வீடு மாறிவிட்டேன், நீங்கள் வரணும்” என்று அழைத்துக்கொண்டே இருந்தார்.
‘வர்றேன்’என்று சொல்லிக் கொண்டிருந்தேன். கடந்த வருடம் ஆகஸ்ட் 20-ம் தேதி காலை அவர் மகன் போன் பண்ணினார். “அப்பா வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரை போனாங்க. ஹார்ட் அட்டாக்லதவறிட்டாங்க” என்று சொன்னதும் எனக்கு பகீரென்றது. அவருக்கு வயது 53, 54 தான் இருக்கும்.
உடனே, காலம் சென்ற ஏழுமலையும் நானும் திருச்சிக்கு சென்று அவர் உடலைப்பார்த்து கதறி அழுது விட்டு வந்தோம். அப்படி என் மீது அக்கறை கொண்ட உடன் பிறவா, உடன் பிறப்பின் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இறைவன் ஒவ்வொரு உறவாக கொடுக்கிறான். பிறகு அவனே எடுத்துக்கொள்கிறான். அதனால் வரும் வேதனையை நாம் அனுபவிப்பதுதான் நாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களுக்கான தண்டனையோ? அவன் கணக்கை யார் அறிவார்?
(திங்கள்தோறும் பேசுவோம்)