அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், தேஜு அஸ்வினி ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மூன்றாம் கண்’.
டிரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் கே.சசிகுமார் தயாரித்துள்ளார். ஜூன் 12-ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் சகோ கணேசன் பேசும்போது, “இது வித்தியாசமான கமர்ஷியல் திரைக்கதையைக் கொண்ட படம். இதில் விருமாண்டி, வான்டேஜ் பாயின்ட் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கான ‘ரோஷமான் எபெக்ட்’ என்ற விஷயத் தைப் பயன்படுத்தி இருக்கிறோம். இந்தக் கதையை எழுதும் போதே சில கதாபாத்திரங்களுக்கு குறிப்பிட்ட நடிகர்களை மனதில் வைத்திருந்தேன்.
விதார்த், சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளனர். கலையரசனின் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. அவருடைய உடல் மொழி, குரல், நடிப்பு என அனைத்தையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். சந்தோஷ் பிரதாப்பை இந்தக் கதாபாத்திரத்துக்காகத் தேர்வு செய்தது சரியான முடிவு என்பதைப் படப் பிடிப்பின் போது உணர்ந்தேன்” என்றார்.