‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் பிரபலமான பிரணவ் மோகனன், ‘ஸ்ட்ரைக்கர்’ படத்தில் நடித்த ஜஸ்டின் விஜய்.ஆர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம், ‘எம்ஜி 24’.
சுவேதா நட்ராஜ், தனலட்சுமி, ஆட்டோ சந்திரன், மலையாள நடிகர் அப்துல் பஷில், பிம்மிசிவா, அர்ஜுன் கார்த்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். பி.பாலாஜி, நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சதாசிவ ஜெயராமன் இசையமைத்துள்ளார். ஜேஆர் சினி வேர்ஸ் சார்பில் டாக்டர் ராஜேந்திரன் வழங்க, ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்துள்ள இப்படத்தை பயர் கார்த்திக் இயக்கியுள்ளார்.
படம் பற்றி பயர் கார்த்திக் கூறும்போது, “இது, சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படம். உதவி இயக்குநராக இருக்கும் நாயகனும், அவன் நண்பர்களும் பாலக்காட்டில் இருக்கும் ஒரு வீட்டை வாங்கும் பொருட்டு அதைப் பார்ப்பதற்காக செல்கின்றனர். அங்கே எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்க, அதிலிருந்து தப்பித்தார்களா, அவர்களுக்கும், அந்த வீட்டில் இருந்தவர்களுக்கும் என்ன நடந்தது ? என்பதுதான் திரைக்கதை.
பாலக்காட்டில் உள்ள ஒரு வீடு, மகிழ் கோமான் என்ற பழைய ஜமீனுடையது. அந்த வீட்டின் நம்பர் 24. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த வீட்டில் நடப்பதால் ஜமீனுடைய பெயரையும் வீட்டின் எண்ணையும் இணைத்து ‘எம்ஜி 24’ என்று தலைப்பு வைத்துள்ளோம்” என்றார். இப்படம் பிப்.20-ம் தேதி வெளியாகிறது.