ஹிப் ஹாப் ஆதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மீசைய முறுக்கு 2’. இதில், சைத்ரா ஆச்சர், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்துள்ள இப்படம் செப். 25-ல் வெளியாகிறது.
இப்படத்தில் இருந்து வெளியான ‘ஆரா 10/10’, ‘பப்பாளிப் பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கெனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தற்போது படத்தின் 5-வது பாடலான ‘கலைவாணியே’ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை கவுஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ளனர்.
“இந்தப் படத்தில் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ற வகையில் காதல், நட்பு, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் உற்சாகமான இசைக் கொண்டாட்டம் என அனைத்து அம்சங்களையும் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது” என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.