செல்வராகவன், கவுசல்யா, குஷி ரவி, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரா என பலர் நடித்துள்ள திரைப்படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. ‘ட்ரிப்’, ‘தூக்குதுரை’ படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.கே.பிரியன் இசை அமைத்துள்ளார். வியோம் என்டர்டெயின்மென்ட் சார்பில் விஜயா சதீஷ், ஆர்.எஸ் சதீஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் கதிரேசன், தனஞ்செயன், கமலகண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான சதீஷ் பேசும்போது, ‘‘சிறுவயதிலிருந்தே என்னைத் திரையில் பார்க்க வேண்டும் என்பது என் அம்மாவின் ஆசை.
எனக்கும் சினிமாவில் நல்ல இடம் பிடிக்க ஆசை இருந்தது. ஆனால் பொறுப்புகள் காரணமாக கார்ப்பரேட் வாழ்க்கையில் இருந்தேன். ஒரு கட்டத்தில், இதை முழுநேரமாகச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இந்தப் பயணத்தில் இறங்கினேன். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் எனக்கு சகோதரன் போன்றவர். கடந்த 15 ஆண்டுகளாக ஒன்றாகப் பயணித்து வருகிறோம்.
இந்தப் படம் 2 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை. இது ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைப் பற்றி ஆராய்ந்தபோது, இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்தோம். அது எங்களை ஆச்சரியப்படுத்தியது. அதனால் இந்தக் கதையை மிகவும் பொறுப்புடன் எடுத்துக் கொண்டு, சரியான முறையில் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தோம்.
அப்போது இந்தக் கதையை செல்வராகவன் சாரிடம் கொண்டு போவோம் என்று முடிவு செய்தோம். அவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே இப் படத்தை எடுக்கத் தீர்மானித்திருந்தோம். அவர் சொன்ன ஓகே என்ற ஒரே வார்த்தை இந்தப் படத்துக்கு உயிர் கொடுத்தது” என்றார்.