தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும் மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடித்துள்ள படம், ‘பாக்கெட் நாவல்’. இவர்களுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பொங்கலை முன்னிட்டு ஜன. 14-ல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இதன் போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் திரைக்குப் பின்னால் பணியாற்றும் கலைஞர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் விதமாக, புதிய வீடியோவை நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், கேமராவுக்கு முன்னால் தோன்றாத, ஆனால் படத்தின் உருவாக்கத்துக்கு பங்களித்துள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் இதர பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.