தனது பெரும்பான்மையான படங்களில் பெண்களின் பிரச்சினைகளை, உணர்வுகளை மென்மையாகப் பேசியிருக்கிற சசி, இப்போது ‘நூறு சாமி’யுடன் வந்திருக்கிறார். விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் என பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில், இசை அமைப்பாளர் பாலாஜி ராம், எடிட்டர் ஹரிஷ் யுவராஜ், ஒளிப்பதிவாளர் தர்ஷன் ஆகிய 3 புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இயக்குநர் சசியிடம் பேசினோம்.
‘நூறு சாமி’ உண்மைக் கதைன்னு சொல்லி இருக்கீங்களே?
ஆமா. கள்ளக்குறிச்சி மாவட்டத்துல இருக்கிற ஒரு கிராமத்துல நடந்த கதை. ஒரு ரியாலிட்டி ஷோவுல ஒரு பெண்ணுக்கு நடந்த சம்பவத்தைப் பார்த்ததும் அது என்னை பாதிச்சது. அந்த சம்பவத்தை அந்த பெண்ணோட மகனே புத்தகமா எழுதியிருக்கார்னு தெரிஞ்சதும் அதை படிச்சுப் பார்த்துட்டு அவரை கூப்பிட்டுப் பேசினேன். அம்மா பற்றி ரத்தமும் சதையுமான ஒரு வாழ்க்கை கிடைச்சது. அதுதான் ‘நூறு சாமி’.
‘பிச்சைக்காரன்’ல நீங்க காட்டிய அம்மாவுக்கும் ‘நூறு சாமி’ காண்பிக்கப் போற அம்மாவுக்கும் என்ன வித்தியாசம்?
‘பிச்சைக்காரன்’ல அம்மாவை, மகன் தெய்வமாகப் பார்த்தான். ‘அம்மா ஒரு தெய்வம், அவங்களை எப்படி மிஸ் பண்ணுவேன்’னு நினைக்கிற மகன், அவங்களுக்கு உடல் நிலை சரியில்லாம போனதும் யாரும் பண்ணாத ஒரு விஷயத்தை பண்ணினான். ஆனா, இந்தப் படத்துல அம்மாவை அவன் தெய்வமா பார்க்கலை. மனுஷியாகத்தான் பார்க்கிறான்.
‘கடவுள், தெய்வம், நூறு சாமிலாம் கிடையாது. நீ மனுஷிதான்’னு அம்மாவை கனிவா பார்க்கிறான். அப்படி அம்மாவைப் பார்க்கிற அந்த அம்மாவுக்காக மகன் பண்ணின விஷயமும் எனக்கு புதுசா தெரிஞ்சது. புதுசுங்கறதை விட, ஓர் அழகான வாழ்க்கையை அது காட்டிச்சு. அதுதான் இந்தப் படம். ‘பிச்சைக்காரன்’ அம்மாவை விட இந்த அம்மா வேற பரிமாணத்துல இருப்பாங்க.
இந்தப் படத்தோட காட்சிகளை பார்த்துட்டு சில இயக்குநர்கள் நெகிழ்ச்சியா பதிவு போட்டிருந்தாங்க...
நானும் பார்த்தேன். எனக்கு தனிப்பட்ட முறையில பிடிச்ச கதைன்னா, நான் இயக்கிய ‘பூ’-வை சொல்வேன். அதே மாதிரி இந்தப்படத்துலயும் அதிகமான வாழ்க்கை இருக்கு. அதாவது ‘பூ’ மாதிரி ஒரு கதையை, ‘பிச்சைக்காரன்’ மாதிரி மக்களுக்குப் பிடிச்ச முறையில சொல்லணும்னு ரொம்ப மெனக்கெட்டிருக்கோம். அதுக்கான பலன்தான் அந்தப் பாராட்டுன்னு நினைக்கிறேன். பார்த்தவங்க எல்லோருமே ரொம்ப சுவாரஸியமா இருக்கு, எப்படி இவ்வளவு ‘டெப்தா’ கதை சொல்றீங்கன்னு கேட்கிறாங்க. இங்க சக்சஸ்புல்லான படத்தை பண்றது கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் ஈஸிதான். நல்ல படம் பண்றது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனா, ஒரு நல்ல படத்தை சக்சஸ் புல்லா பண்றது ரொம்ப கஷ்டம்.
விஜய் ஆண்டனியோட உங்களுக்கு 2-வது படம். கிராமத்து கதாபாத்திரத்துக்கு எப்படி பொருந்துறார்?
இதுல கரும்பு வெட்டுறவரா விஜய் ஆண்டனி நடிச்சிருக்கார். இந்தக் கதையில சுவாசிகாவின் கேரக்டரோட ஒப்பிடும்போது அவருக்கான ‘ஸ்கிரீன் ஸ்பேஸ்’ குறைவுதான். அதனாலயே அவர்கிட்ட இந்தக் கதையை சொல்லலாமா, வேண்டாமான்னு இருந்தேன். அவர், ‘எனக்கு கதை இருக்குமா?’ன்னு கேட்கும்போது, ‘இந்தக் கதைதான் இருக்கு’ன்னு சொன்னேன். கேட்டதுமே, ‘பிச்சைக்காரன்’ கதையை கேட்டுட்டு எப்படி ஃபீல் பண்ணினாரோ, அதே மாதிரி கண்ணீர் விட்டார். உடனடியா, ‘என்னோட பேனர்ல இன்னொரு நல்ல படம் வரணும்’னு சொல்லிட்டு நடிக்கிறேன்னார். அவர் தயாரிப்புல வர்ற நல்ல படமா, காலகாலத்துக்கும் இது நிற்கும். படம் பார்த்துட்டு வரும்போது நாலு, அஞ்சு விஷயங்களை பெருசா பேசுவாங்கன்னு நம்பறேன். அதுல ஒண்ணு, விஜய் ஆண்டனி நடிப்பு. அதே போல சுவாசிகாவோட நடிப்பும் பேசப்படும். அவங்க கேரக்டருக்கு எனக்கு வேற எந்த ஆப்ஷனும் இல்லை. படத்துல ஒரு வசனமே வரும், ‘இப்படி நடிக்கிறியே நீ சாவித்ரியா, சிவாஜியா?’ன்னு. அது உண்மைதான். படம் முடிஞ்சதும் நானே நினைச்சேன் சுவாசிகா, சாவித்திரிதான்னு.
இந்தப் படம் என்ன மெசேஜ் கொடுக்கும்?
மெசேஜ் அப்படின்னு சொல்ல முடியாது. இந்தப் படம் பார்த்துட்டு வெளிய வர்ற ஒவ்வொருத்தரும், ‘நான் ஏன் எங்க சித்திய அப்படி விட்டுட்டேன், எங்க பெரியம்மாவை ஏன் இப்படி கண்டுக்காம போயிட்டேன், இந்தப்படத்துல வர்ற பையன் மாதிரி, நாம ஏன் பண்ணக் கூடாது?’ன்னு நினைப்பாங்க. ஒவ்வொருத்தரும் தங்களோட வாழ்க்கையில இருந்தோ அல்லது சொந்தத்துக்குள்ள இருந்தோ ஒருத்தர் வாழ்க்கையை பார்த்த உணர்வை இந்தப் படம் கொடுக்கும். படம் பார்க்கிற எல்லோருமே ஒரு கேள்வியோட வருவாங்க. இது, ‘பூ’வும் ‘பிச்சைக்காரனு’ம் கலந்த படம். நான் நினைச்ச உயரத்துக்கு இந்தப் படம் போகலைனாலும் இந்த வருடத்தோட மிகப்பெரிய பேசுபொருளா இருக்கும்.
‘பூ’ படத்துக்குப் பிறகு நாவல்களை, சிறுகதைகளை அதிகம் படமா பண்ணுவீங்கன்னு எதிர்பார்ப்பு இருந்துச்சு...
உண்மைதான். இந்தக் கதையை கூட ஒரு புத்தகத்துல இருந்துதான் எடுத்தேன். இது ஒரு வாழ்க்கைக் கதை, அதை அனுமதி வாங்கி எடுக்கறேன். சிறுகதைகள்ல இருந்தும் நாவல்ல இருந்தும் கதைகளை எடுக்கும்போதும் அதுல உயிர் இருக்கும். அதைதான் நானுமே விரும்பறேன்.
பெரிய ஹீரோக்களை வச்சு படம் பண்றதை வேணும்னே தவிர்க்கிறீங்களா?
2008-ல எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமிகிட்ட பேசிட்டிருக்கும்போது, ‘நான் எப்பவும் கதையாகத்தான் எதையும் யோசிப்பேனே தவிர, ஹீரோயிசம் அதுக்குள்ள இருக்கணும்னு நினைக்க மாட்டேன்’னு சொன்னேன். அவர் சொன்னார், “ஹீரோயிசம் தப்பான விஷயம் இல்லை. எது ஹீரோயிசம் அப்படிங்கறதுதான் முக்கியம். காந்தியை ரயில்ல இருந்து தள்ளிவிடும்போது, இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு அவர் எந்திச்சு நின்னார்ல, அதுதான் காந்தியின் ஹீரோயிசம். நீங்க எதை ஹீரோயிசமாக தேர்ந்தெடுக்கிறீங்களோ அதுலதான் தப்பு, ரைட்டுன்னு இருக்கு”ன்னார். அது இப்பவும் என் மனசுக்குள்ள இருக்கு. அடுத்து ஒரு ஹீரோ கதையைதான் தேடிட்டு இருக்கேன். அடுத்த படத்துல ஹீரோயிசத்தோடதான் வருவேன்.
சமீபத்துல வர்ற ‘மாடர்ன் டே’ காதல் படங்களை கவனிக்கிறீங்களா?
கண்டிப்பா. ‘வித் லவ்’ படம் எனக்கு பிடிச்சிருந்தது. ‘சிறை’யும் நல்லா இருந்தது. நான் குறும்படங்களையும் அதிகமா பார்ப்பேன். அதுல இன்றைய இளைஞர்கள் கையாள்ற உத்திகளை கத்துக்கறதுக்கு நிறைய இருக்கு. ‘யூத்’களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?ன்னு யாராவது கேட்டா, ‘அவங்களை சொல்ல சொல்லுங்க, அவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்க வேண்டியிருக்கு’னு சொல்வேன்.