கடந்த 2020-ம் ஆண்டில் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் மூலம் இயக்குநராக மாற முயன்றார் நடிகர் விஷால். அந்தப் படத்தின் இயக்குநர் மிஷ்கினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், படத்தை இயக்கும் பொறுப்பை தயாரிப்பாளராகவும் இருந்த விஷாலே ஏற்றுக்கொண்டார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் கடைசிவரை வெளியாகவில்லை.
ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 2026-ல் ‘மகுடம்’ படத்தின் மூலம் ஒருவழியாக இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். இந்தப் படத்துக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தைப் போலவே ஒரு பின்னணி உண்டு. அந்த படத்தைப் போலவே இதிலும் இயக்குநர் ரவி அரசு உடனான பிரச்சினையால், இயக்கும் பொறுப்பை விஷால் எடுத்துக்கொண்டிருக்கிறார். இப்படியாக இந்தப் படத்தின் மூலம் விஷால் மேற்கொண்ட இந்த ‘விஷப் பரீட்சை’ எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
2023-ல் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதைப் போலவே ஒரு மசாலா படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஐடியா விஷால் மனதில் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், ஒரு வெற்றிப் படத்தில் கைகொடுத்த விஷயங்களை அப்படியே எடுத்துக்கொண்டு, அதில் எந்தவித புதுமையையும் சேர்க்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு அருமையான உதாரணமாக வந்திருக்கிறது ‘மகுடம்’.
மார்க் ஆண்டனியில் வந்த அதே ரவுடி அப்பா - அப்பாவி மகன் வேடம். போதைப்பொருள், ஆயுதக் கடத்தல் என ஏற்கெனவே பல படங்கள் வந்துவிட்டதால், விபத்தை ஏற்படுத்தும் போலியான கார் உதிரிபாகங்கள் கடத்தல், அதோடு சமூகத்துக்கு ஒரு மெசேஜ், கூடவே நாஸ்டால்ஜியாவைத் தூண்டும் இளையராஜாவின் பாடல்கள். ‘மகுடம்’ ரெடி.
முதலில் எந்தப் படத்துக்கும் அடிப்படையாக ஒரு கதை முக்கியம் அல்லவா? ஆனால் ‘மகுடம்’ படத்தில் அப்படி சொல்வதற்கு எதுவுமே இல்லை. படம் தொடங்கியது முதல் குருட்டாம்போக்கில் காட்சிகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. நாயகன் அறிமுகம் ஆகி அவருடைய பின்னணியை நமக்கு உணர்த்தவே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் விஷால்.
இதென்ன உலக சினிமாவா? ஒரு கமர்ஷியல் படத்தில் எதற்காக காட்சிகளை இவ்வளவு இழுக்க வேண்டும். வேலை முடித்து வீட்டுக்கு வரும் விஷால், பைக்கை நிறுத்துவது, சாவியை எடுப்பது, செருப்பை கழற்றுவது, கழுத்தில் இருக்கும் டையைத் தளர்த்துவது, கைகளைக் கழுவுவது, சாப்பிட உட்காருவது என ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனி காட்சிகளாகக் காட்டுகிறார்கள்.
புதிய இயக்குநர் என்பதால் சில குறைகளை கண்டுகொள்ள தேவையில்லைதான். ஆனால் விஷால் போன்ற பல ஆண்டுகள் சினிமாவில் இருந்த அனுபவமுள்ள நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் மக்களின் ரசனை ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. தமிழ் சினிமா ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பே தூக்கி எறிந்துவிட்ட சில பழைய யோசனைகளை மீண்டும் திரையில் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?
சரி, காமெடியாவது கைகொடுத்திருக்கிறதா என்று பார்த்தால், தம்பி ராமையா வரும் காட்சிகளில். ‘ஆயில் - ஆயுள்’, ‘நம்பர் - நம்பறது’, ‘ஏமாத்துறது - ஏன் மாத்துறது’ போன்ற வார்த்தை விளையாட்டுகளை வைத்து எழுதியிருக்கும் வசனங்கள் எரிச்சலை ஏற்படுத்திவிடுகின்றன.
கதை எந்தத் திசையில் செல்கிறது என்பது புரியாமல் ஓடிக்கொண்டிருக்கும்போது, நம்முடைய கவனமும் திரையிலிருந்து எங்கெங்கோ செல்கிறது. அடிப்படையில் ‘மகுடம்’ அப்பா - மகன் உறவைச் சுற்றியே நகரும் கதை. முதல் பாதியில் கிருபாகரன் என்ற மகன் விஷால், எந்த வம்புக்கும் செல்லாத சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத் தலைவனாக வருகிறார். அதன்பிறகு லிங்கா என்ற அப்பா விஷால் அறிமுகமாகிறார். விசாகப்பட்டினம் துறைமுகத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு ‘நல்ல ரவுடி’ அவர்.
முதல் பாதியில் அப்பாவுக்கும் மகனுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக காட்டப்படவில்லை. மீதிப் படம் முழுவதும் அவர்கள் ஏன் பிரிந்தார்கள், அவர்களுக்குள் என்ன நடந்தது என்பதைத்தான் விளக்க முயற்சி செய்கிறது. கதை பழையதாக இருக்கலாம். ஆனால், நல்ல திரைக்கதை இருந்திருந்தால் இந்தக் கதையையே சுவாரஸ்யமாக மாற்றியிருக்க முடியும்.
துரதிருஷ்டவசமாக, விஷாலின் எழுத்தும் இயக்கமும் நம்முடைய கவனத்தை எங்கும் ஈர்க்கவில்லை. படத்தை உருவாக்கிய விதமே தொடர்ந்து சலிப்பை ஏற்படுத்துகிறது. சமீப காலத்தில் வெளியான படங்களில் மிகவும் மோசமாக எடிட் செய்யப்பட்ட படங்களில் ஒன்றாக ‘மகுடம்’ இருக்கிறது.
அப்பா விஷாலின் அறிமுகத்தின்போது அவரது முகத்தையே நேரம் காட்டாமல் இவ்வளவு நேரம் நீட்டிப்பதன் நோக்கம் என்ன என்பது புரியவில்லை. விஷால் ஒரு புதிய தோற்றத்தில் இருக்கிறார் என்பது அந்த காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது. அதன்பிறகு அந்தக் காட்சியை இவ்வளவு நேரம் இழுக்க வேண்டிய அவசியம் என்ன?
ஒரு கார் வாங்க வேண்டும் என்ற நடுத்தர வர்க்க மனிதனின் கனவை ஏன் நாற்பது நிமிடங்களுக்கு மேல் இவ்வளவு நீளமாகக் காட்ட வேண்டும்? அதன் பின்னர் வரும் போலியான கார் உதிரிபாகங்கள் பற்றிய காட்சிக்காக இத்தனை நேரம் செலவிட்டார்களோ என்று நினைத்தால், அதுவும் இல்லை. அதன்பிறகு வரும் இரண்டு மணி நேர ப்ளாஷ்பேக் கதையோ முற்றிலும் வேறு திசையில் செல்கிறது.
நல்ல கதைகளுடனும் திறமையுடனும் வாய்ப்புக்காக எத்தனையோ புதிய இயக்குநர்கள் காத்திருக்கிறார்கள். அப்படியான சூழலில், முன்னணி நடிகராக இருந்து இயக்குநராக மாறியுள்ள விஷால் எடுத்த படம் இப்படி அமைந்திருப்பது மிகப்பெரிய ஏமாற்றம்.
சரி, திரைக்கதைதான் பிரச்சினை என்று பார்த்தால், ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத காட்சிகள், தரமில்லாத ஒப்பனை, அபத்தமான வசனங்கள் என படம் தொடர்ந்து கீழே சென்றுகொண்டே இருக்கிறது.
விஷால் தன்னுடைய இரண்டு கதாபாத்திரங்களிலும் முழுமையாகக் கவரவில்லை. மகனாக வரும் கிருபாகரன் கதாபாத்திரத்தில், பயந்த சுபாவம் கொண்ட நடுத்தர வர்க்க இளைஞராக ஓரளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார். அப்பா கதாபாத்திரம் ‘மார்க் ஆண்டனியில்’ வரும் கதாபாத்திரத்தின் அதே நகல். குரல் மாடுலேஷன் உட்பட.
இரண்டு கதாநாயகிகளில், மீன் வியாபாரியாக வரும் அஞ்சலிக்கு ஓரளவுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. அப்பா விஷாலுக்கும் அஞ்சலிக்கும் இடையிலான காதல் காட்சிகள் புதிதாக இல்லாவிட்டாலும், அஞ்சலியின் கதாபாத்திரம் மற்றவற்றுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்று சொல்லலாம்.
துஷாரா விஜயனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஜமுனா கதாபாத்திரமும் பெரும் ஏமாற்றம். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக வரும் அவருடைய கதாபாத்திரத்துக்கு ஒரே ஒரு முக்கியமான வேலைதான் கொடுக்கப்பட்டிருக்கிறது, அது சாப்பிடுவது. ஜி.வி.பிரகாஷின் இசை உள்ளிட்ட எந்த அம்சமும் இந்தப் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.
மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஓடும் இந்தப் படம், பல மோசமான படங்களால் கூட செய்ய முடியாத ஒன்றைச் செய்கிறது. படம் பார்ப்பதையே ஒரு தண்டனையாக உணர வைக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமா கைவிட்ட பழைய கதையையும், பழைய காட்சியமைப்பையும் ஒன்றாக சேர்த்து, இந்த ஆண்டின் மிகவும் சலிப்பூட்டும் மசாலா படங்களில் ஒன்றாக முடிகிறது ‘மகுடம்’.