பிரதீப் ரங்கநாதன்ன் ‘எல்ஐகே’ வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘டியூட்’ மற்றும் ‘எல்ஐகே’ ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடாக அறிவிக்கப்பட்டன. இறுதியாக தங்களது வெளியீட்டை தள்ளிவைப்பதாக ‘எல்ஐகே’ படக்குழு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 18-ம் தேதி ‘எல்ஐகே’ வெளியாகும் என பாடல்களும் வெளியிடப்பட்டன. ஆனால், தற்போது அந்த தேதியிலும் வெளியாகாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘எல்ஐகே’ படத்தின் வேலைகள் முடிவடைந்தாலும், சரியான திரையரங்குகள் கிடைக்காது என படக்குழு கருதுகிறது. ஏனென்றால் ‘அவதார்’ உள்ளிட்ட பல படங்கள் வெளியாக இருப்பதால், படத்தின் பொருட்செலவையும் கணக்கில் கொண்டு வெளியீட்டில் பின்வாங்கி இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘எல்ஐகே’. ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்கள். இதனை லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.