திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார், பிரிகிடா சாகா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘டெலிவரி பாய்’.
ராதிகா சரத்குமார், காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், துஷ்யந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். வி.எஸ். மாதேஸ்வரன் எம்.பி, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அசசி கிரியேஷன்ஸ் சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ளார்.
சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ள இப்படத்துக்கு அசோக்குமார் ராஜ், பிரசன்னா எஸ்.குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். நவ.27-ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
லியோ சிவக்குமார் பேசும்போது, “நான் குறும்படங்களில் நடித்து, பல்வேறு முயற்சிகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகுதான் திரைத்துறைக்கு வந்தேன். நடிகனானேன். திரைத்துறைக்கு வந்த பிறகு எனது தந்தையின் பெயரான லியோனியின் பெயரும் என்னுடன் இணைந்தது. என்னை எனது தந்தையின் அடையாளத்தின் வழியாகப் பார்க்காமல், தனி கலைஞனாகப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் நானி பேசும்போது, “சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு லியோ சிவக்குமாரைச் சந்தித்து இந்தக் கதையைச் சொன்னேன். அவர் விரும்பி ஏற்றுக்கொண்டார். பல ஆண்டுகளாகப் பல போராட்டங்களையும் தயாரிப்பாளரைத் தேடும் சிரமங்களையும் கடந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். டெலிவரி பாயின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள் அவனை எந்தப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்பதை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளோம்” என்றார்.