தமிழ் சினிமா

‘தேனிசை தென்றல்’ தேவா மிகவும் நல்லவர்! - தலைவர்கள் இரங்கல்

செய்திப்பிரிவு

தேவாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்: எளிய மக்களின் உணர்வுகளையும் வாழ்வியலையும் தனது இசையிலும் கானா பாடல்களிலும் அழகாக வெளிப்படுத்தி, தனித்துவமான இசைப்பாணியால் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் தேவா. 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன், பாடலாசிரியராகவும் பாடகராகவும் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர். காலத்தால் அழியாத பல பாடல்களைத் தந்த அவரது இசைப் பங்களிப்பும், தனித்துவமான கானா பாடல்களும் என்றும் நினைவுகூரப்படும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக ஆளுநர் ஆர்லேகர்: தனது இனிமையான இசையமைப்புகள் மற்றும் மறக்க முடியாத பாடல்கள் மூலம் தமிழ் திரையுலகில் தேவா தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்தார். அவரது மறைவு தமிழ்த் திரையுலகுக்கும் இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

முதல்வர் விஜய்: தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர். கலைஞர் தான், தேவாவின் இசையின் இனிமையை மெச்சி ‘தேனிசைத் தென்றல்’ என்ற பட்டத்தை வழங்கினார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர் தேவா. அவர் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தேனிசை தென்றல் தேவா, அதிமுக-வுக்காக பல்வேறு கொள்கை விளக்கப் பாடல்களை சிறந்த இசையமைப்புடன் வடிவமைத்துக்கொடுத்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பல்வேறு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மகன், ஸ்ரீகாந்த் தேவாவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கமல்ஹாசன் எம்.பி: அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உற்சாகமும் துறுதுறுப்பும், சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது. அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல்களும் இரங்கல்களும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT