தமிழ் சினிமா

லீடர்: விமர்சனம் - லெஜெண்ட் சரவணனின் ‘மாஸ்’ முயற்சி எப்படி?

டெக்ஸ்டர்

கடந்த 2022-ம் ஆண்டு 'தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சரவணன், அந்தப் படத்தில் சந்தித்த விமர்சனங்களையும் கிண்டல்களையும் ஒரு சவாலாக ஏற்று, தற்போது 'லீடர்' படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ’எதிர்நீச்சல்’, ‘கொடி’, ‘கருடன்’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

தூத்துக்குடி துறைமுகத்தைச் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள சால்ட் (பாகுபலி பிரபாகர்) எனும் லோக்கல் தாதா, தி டெவில் (சந்தோஷ் பிரதாப்) எனும் சர்வதேச லெவல் குற்றங்களில் ஈடுபடும் கேங்ஸ்டர் ஒருவருடன் இணைந்து அம்மோனியம் நைட்ரேட் கடத்த திட்டமிடுகிறார். இதனைத் தடுக்க முயலும் போலீஸ் அதிகாரி சந்திரா (ஆண்ட்ரியா), மேலதிகாரிகளின் நெருக்கடியை சந்திக்கிறார்.

இன்னொரு புறம், துறைமுகத்தில் மெக்கானிக்காக வேலை செய்யும் சக்திவேல் (சரவணன்), தற்செயலாக சால்ட் உடனான மோதலில் ஈடுபட, சக்திவேலின் பின்னணி சந்திராவுக்கு தெரியவருகிறது. சக்திவேலின் கடந்த காலம் என்ன, அவருடன் இருக்கும் சிறுமி யார் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘லீடர்’.

          

தனது முந்தைய படத்தில் இருந்த அதீத ‘கமர்ஷியல்’தனம் இதில் இடம்பெறக் கூடாது என்பதில் ’தயாரிப்பாளர்’ லெஜெண்ட் சரவணன் உறுதியாக இருந்திருப்பார் என்பது படத்தின் ட்ரெய்லர் வந்தபோதே தெரிந்தது. அதனை மனதில் கொண்டு தன்னால் முடிந்த அளவு கண்ணை பறிக்கும் கலர்ஃபுல் ஃப்ரேம்கள் எதுவும் இன்றி ஒரு டார்க் ஆக்‌ஷன் த்ரில்லரை உருவாக்கியுள்ளார் இயக்குநர் துரை செந்தில்குமார். சரவணனை ஒரு அதீத பிம்பமாக் தூக்கிக் காட்டாமல், ஓர் அழுத்தமான ஆக்‌ஷன் படத்துக்கு ஏற்ற ஒரு அமைதியான கதாபாத்திரமாக வடிவமைத்து இருக்கிறார். 

ஒரு த்ரில்லர் படத்துக்கு தேவையான விறுவிறுப்பான தொடக்கத்துடனே படம் ஆரம்பிக்கிறது. வில்லனின் பின்னணி, அடுத்து ஹீரோவின் வாழ்க்கை, துணை கதாபாத்திரங்களின் அறிமுகம் என அடுத்தடுத்து காட்சிகள் நகர்வது ப்ளஸ். கிட்டத்தட்ட இடைவேளை வரையுமே திரைக்கதை எங்குமே தேங்கிவிடவில்லை. இடைவேளைக்கு முந்தைய 20 நிமிடக் காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைத்து விடுகின்றன. இடைவேளைக் காட்சியும் பக்கா ‘மாஸ்’ ரகம். 

‘பாட்ஷா’, ‘தெறி’ போன்ற படங்களின் சாயல் ஆங்காங்கே தெரிந்தாலும், அதனை இயக்குநர் கையாண்ட விதம் ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் லாஜிக் ஹெவியாக மீறப்பட்டாலும், முதல் பாதி திரைக்கதையின் வேகம் அதனைப் பெரிய குறையாகத் தெரியவிடாமல் பார்த்துக் கொள்கிறது.

முந்தைய படத்தோடு ஒப்பிடுகையில் சரவணனுக்கு இது பல படிகள் முன்னேற்றம் எனலாம். அளவுக்கு அதிகமாக நடிக்க முயலாமல், நடனம், நகைச்சுவை போன்ற விஷப் பரிட்சைகளில் இறங்காமல் இயக்குநரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துள்ளார்.

குறிப்பாக முந்தைய படத்தின் தனது தோற்றம், நடிப்பு குறித்த விமர்சனங்களை கவனத்தில் கொண்டு இதில் முடிந்த அளவு தன்னை மெருகேற்றி உள்ளார். ட்ரோல்களைக் கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து முயற்சி செய்யும் அவரை மனதார பாராட்டலாம். எனினும் வசன உச்சரிப்பு, எமோஷனல் காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். அடுத்தடுத்த படங்களில் இதையும் சரிசெய்வார் என்று நம்பலாம்.

வழக்கமான கார்ப்பரேட் வில்லனாக வந்தாலும் சந்தோஷ் பிரதாப் ஈர்க்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, லால் ஆகியோருக்கு பெரிய வேலை இல்லை.  பாயல் ராஜ்புத் சில காட்சிகளுக்கு நாயகி என்ற பெயரில் உதவியிருக்கிறார். விடிவி கணேஷ் நகைச்சுவைக்கு முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை. 

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் நீண்ட பிளாஷ்பேக் காட்சி சோர்வைத் தருகிறது. சில இடங்களில் கதை சொல்லப்பட்ட விதம் மிகவும் அரதப் பழைய டெக்னிக். சர்வதேச உளவு அதிகாரிகளின் செயல்பாடுகள் என்று சொல்லப்படுபவை நம்பகத்தன்மை அற்றதாகவும், சில இடங்களில் காமெடியாகவும் உள்ளது. இந்த ப்ளாஷ்காட்சியின் மேக்கிங்கும் கூட சுமார் ரகம்தான்.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் மொத்தமாக இங்கே மிஸ்ஸிங். ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட், ட்விஸ்ட்டுக்குள் ஒரு ட்விஸ்ட், குட்டி ட்விஸ்ட், பெரிய ட்விஸ்ட் என்று வந்துகொண்டே இருக்கிறது. ஆனால் அவை ஆடியன்ஸிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி எடுக்கப்பட்ட விதம் சிறப்பு என்றாலும் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். 

தொழில்நுட்ப ரீதியாகப் படம் மிகவும் உயர் தரத்தில் உள்ளது. வெங்கடேஷின் ஒளிப்பதிவு அந்த புழுதி படிந்த துறைமுகச் சூழலையும், குறிப்பாக க்ளைமாக்ஸில் வந்தே பாரத் ரயிலுக்குள் நடக்கும் சண்டைக் காட்சிகளையும் மிக தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளது. எடிட்டிங் படத்தின் வேகத்திற்கு பெரியளவில் உதவி இருக்கிறது.

குறிப்பாக ஹீரோவின் ஆக்‌ஷன் காட்சிகளில் இருக்கும் சில குறைபாடுகளை கேமரா கோணங்கள் மற்றும் எடிட்டிங் உத்திகள் மூலம் மறைத்து, அவரை ஒரு முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக காட்ட உதவி இருக்கிறது.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் வேகத்தை தூக்கி நிறுத்த உதவி இருக்கிறது. பாடல்கள் மாண்டேஜ் காட்சிகளாக வருவது ஆறுதல். எனினும் ட்ரெய்லரில் கவனம் ஈர்த்த ‘முத்தைத் தரு பத்தி திருநகை’ பாடல் வைக்கப்பட்ட இடம் பொருந்தவில்லை. மகேஷ் மேத்யூவின் ஆக்‌ஷன் காட்சிகள் ‘ஃபயர்’ ரகம். 

மொத்தத்தில், இது சரவணனுக்கு ஒரு நடிகராக தன்னை மெருகேற்றிக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு என்று சொல்லலாம். அதை அவர் முடிந்தவரை சிறப்பாகவே செய்துள்ளார். சமூக வலைதள ட்ரோல்களுக்கான வாயில்களை முற்றிலுமாக அடைத்துள்ளார். லாஜிக்கை ஓரம் வைத்துவிட்டுப் பார்த்தால் ஒரு போரடிக்காத ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வந்திருக்கிறது. இரண்டாம் பாதி தொய்வை சரிசெய்து முதல் பாதி விறுவிறுப்பை கடைசி வரை தக்கவைத்திருந்தால் மறக்க முடியாத அனுபவத்தை தந்திருக்கும் இந்த ‘லீடர்’. 

SCROLL FOR NEXT