‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படக்குழுவுடன் சுப.வீரபாண்டியன்
‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சுப.வீரபாண்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டு படங்களை உருவாக்குபவர் தயாள் பத்மநாபன். தற்போது ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ என்ற தலைப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சுப.வீரபாண்டியன் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து தயாள் பத்மநாபன் கூறும்போது, “தமிழ்நாட்டில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குதான் இந்த ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’. இந்தக் கொலை வழக்கு பற்றிப் பல ஆராய்ச்சிகளைத் தழுவியே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்தக் கொலை வழக்கின் உண்மைச் சம்பவங்கள், இதற்கு பின்னால் அமைந்திருக்கும் மர்மங்களைப் பற்றி இன்னும் உண்மைத்தன்மையுடன் கொண்டு வருவதற்காக சுப. வீரபாண்டியன் நடிக்கவுள்ளார்.
சுப.வீரபாண்டியன் ஒரு வரலாற்று ஆய்வாளர். ஆகையால் இந்தக் கதையை மேலும் உண்மைத் தன்மையுடன் கொண்டு வருவதற்கு அவரது பங்களிப்பு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தை 2M சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு மற்றும் கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.