தமிழ் சினிமா

“எனது 40 ஆண்டு திரை வாழ்வில்...” - குஷ்பு நெகிழ்ச்சிப் பகிர்வு

ப்ரியா

”தென்னிந்தியாவை பற்றி எதுவும் தெரியாமல் 15 வயதில் இங்கு வந்தேன். என்னை ஆதரித்து வாழ வைத்த ரசிகர்களுக்கு நன்றி” என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சினிமாவில் தான் 40 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை நினைவுகூர்ந்துள்ளார். அந்தப் பதிவில் குஷ்பு, ‘தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன்.என்னுடைய முதல் தென்னிந்திய மொழிப் படமான ‘கலியுக பண்டவுலு’ 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ல் தான் வெளியானது.

15 வயது சிறுமியாக தென்னிந்தியாவைப் பற்றி எதுவும் தெரியாமல் பதற்றத்துடன் இங்கே வந்தேன். இங்கேயே எனது தொழில், வாழ்க்கை, குடும்பம் எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டேன். என்னுடன் நின்று ஆதரிக்கும், நிபந்தனை இல்லாமல் அன்பு செலுத்தும், வழிநடத்தும் அனைவருக்கும் எப்போதும் கடன்பட்டிருக்கிறேன். 

என்னை ஏற்றுக்கொண்டு, என் வாழ்வில் பாதியாகி இந்த பயணத்தில் உடன் இருக்கும் என் ரசிகர்களுக்கு கோடான கோடி நன்றிகள். நீங்கள் இல்லாமல் நான் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது.

முதன்முதலாக என்னை தெலுங்கில் அறிமுகப்படுத்திய டி.ராமாநாயுடு, ரகவேந்திர ராவ், சுரேஷ் நாயுடுவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த பயணத்தின் மிக அழகான விஷயம், வாழ்நாள் முழுவதும் தொடரும் வகையில் வெங்கடேஷ் போல் ஒரு நண்பர் கிடைத்ததுதான். ஒரு நடிகராக பயணத்தைத் தொடங்கி, நட்சத்திரமாக உயர்ந்த பின்பும் மாறாமல் இருக்கும் அவரது பயணம் எனக்கு எப்போதும் உத்வேகம் தருபவை.

கடந்த 40 ஆண்டுகளாக என் வாழ்வில் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றி வெங்கி. இன்னும் பல ஆண்டுகள் நண்பர்களாக தொடர்வோம். லவ் யூ’ என்று தெரிவித்துள்ளார்.    

SCROLL FOR NEXT