“நமது கலாச்சாரத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது” என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். கீர்த்தி உடனான நேர்காணல் ஒன்றில் ராதிகா ஆப்தே தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ படம் நவம்பர் 20 அன்று வெளியாக உள்ளது. இந்த படத்துக்கான செய்தியாளர்கள் சந்திப்பின் போது ‘அக்கா’ வெப் தொடர் வெளியான சமயம் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே உடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட உரையாடல் நிகழ்ச்சியில் ராதிகா ஆப்தே தென்னிந்திய கலாச்சாரம் குறித்து பேசியது பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கீர்த்தி சுரேஷ், “முதலில் அவர் எதைப்பற்றி பேசுகிறார் என்றே எனக்கு புரியவில்லை. அவர், நான் என் தாய் மாமாவைக் காதலித்தேன் என்பது போல பேசினார். பின்பு அவர் நமது தாய் மாமன் உறவு குறித்து பேசுகிறார் என தெரிந்ததும் நான் அது குறித்து விளக்கம் அளித்தேன்.
தென்னிந்தியாவில் தாய் மாமாவைத் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் இருக்கிறது என விளக்கினேன். தாய் மாமாவைத் திருமணம் செய்து கொள்ளும் கலாச்சாரத்தை அவர்களுக்கு எப்படி சொன்னாலும் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. அங்கே சென்று நமது கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்க முடியாது இல்லையா?
நமது இந்தப் பாரம்பரியத்தை நான் விளக்கவும் முடியாது. அதனால்தான் அது எங்கள் கலாச்சாரம் என கூறினேன். தமிழகத்திலும், தெலுங்கிலும் தாய் மாமாவை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. கேரளாவில் அது கிடையாது. கர்நாடகா பற்றி எனக்கு தெரியவில்லை. அதை நான் ஒரு தகவலாக தான் சொன்னேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி மொழிகளில் நடிக்கும் நீங்கள் உங்களை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வீர்கள் என்ற கேள்விக்கு, “நிச்சயமாக தென்னிந்திய நடிகையாகத்தான். மலையாளத்தில் நடிக்க தொடங்கி தமிழில் தொடர்கிறேன். தெலுங்கு திரையுலகமும் எனக்கு முக்கியம் தான். தமிழ், மலையாளம் எனது தாய் வீடு; தெலுங்கு எனது புகுந்த வீடு” என தெரிவித்தார்.
ராதிகா ஆப்தே பேசியது என்ன? - ‘அக்கா’ வெப் சீரிஸை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் நடந்த ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் ராதிகா ஆப்தே, கீர்த்தி சுரேஷ் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது திரை வாழ்க்கையில் மிகவும் சவாலான கதாபாத்திரம் எது என ராதிகாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “ஒரு தெலுங்கு படத்தில் நான் எனது தாய் மாமாவை திருமணம் செய்வது போல நடித்தேன். அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலாக இருந்தது. என்னை விட வயதில் மூத்த நடிகருடன் நான் காதல் புரியவேண்டி இருந்தது. ஆணாதிக்கம் நிறைந்ததாக அந்த சூழல் இருந்தது” எனத் தெரிவித்திருந்தார்.