தமிழ் சினிமா

“ஒட்டுமொத்த அமைப்பின் தோல்வி” - ‘ஜனநாயகன்’ லீக் குறித்து கமல்ஹாசன் வேதனை

ப்ரியா

சென்னை: “ஜனநாயகன் திரைப்படம் கசிந்திருப்பது ஒரு விபத்தல்ல; அது ஒட்டுமொத்த அமைப்பின் தோல்வியால் விளைந்ததாகும்” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “ஜனநாயகன் திரைப்படம் கசிந்திருப்பது ஒரு விபத்தல்ல. அது ஒட்டுமொத்த அமைப்பின் தோல்வியால் விளைந்ததாகும். உரிய நடைமுறைகள் காலத்தே எடுக்கப்பட்டிருந்தால், நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம். 

          

தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தேவையற்ற தாமதங்கள், திருட்டுத்தனமாகத் திரைப்படம் வெளியாவதற்குச் சாதகமான சூழலை உருவாக்கிவிட்டன. சட்டப்பூர்வமான அணுகுமுறை முடக்கப்படும்போது, சட்டவிரோத வழிகள் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன.

திரைப்பட திருட்டு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அது ஒரு கலைக்கும், கலைஞனுக்கும் எதிராக நடத்தப்படும் தாக்குதலாகும். இது நூற்றுக்கணக்கான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பையும், நாம் நேசிக்கும் சினிமாவைத் தாங்கிப் பிடிக்கும் நேர்மையாக வரி செலுத்தும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் முதலீட்டையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.

அமைப்பே தோல்வியடையும்போது, படைப்பாளியை யார் பாதுகாப்பார்கள்? இங்கே பொறுப்புக்கூறல், விரைவான தணிக்கை முறை, கடுமையான அமலாக்கம் மற்றும் நிகழ்நேரத் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை அவசியமாகத் தேவைப்படுகின்றன.

சினிமாவை உண்மையாக நேசிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கடந்த காலங்களில் நீங்கள் எனக்குத் துணையாக நின்றது போலவே, இப்போது இத்திரைப்படத்தைச் சட்டப்பூர்வமாகத் திரையரங்குகளில் பார்த்துப் படத்திருட்டிற்குத் தகுந்த பதிலடி கொடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

SCROLL FOR NEXT