ஜெயராம், அஸ்வின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘குட் நியூஸ்’. இப்படம் மூலம் மலையாள நடிகையான கல்யாணி அனில், தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.
இவர்களுடன் ஆஷா சரத், முத்துக்குமார், ஜாஃபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துளனர். அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கியுள்ள இப்படத்துக்கு இயக்குநர் பாண்டிராஜ் வசனம் எழுதியுள்ளார்.
மூவிட்ரோன் புரொடக் ஷன்ஸ் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரித்துள்ள இப்படத்துக்கு சித்துக்குமார் இசையமைக்கிறார். “குடும்ப உணர்வுகள், நம் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய மனித உறவுகளை மையமாகக் கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவை, பாசம், உணர்ச்சிகரமான தருணங்கள் என பல அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக இது அமையும்” என படக்குழு தெரிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பின்போது உருவான மறக்க முடியாத நினைவுகளைக் கொண்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.