

சென்னை: பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கும் படத்த்துக்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தை ஜியோன் ஃபிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்தும், எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன. பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இவ்விரு நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் வெளியான 'வித் லவ்' திரைப்படம் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா - சிம்ரன் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரபுதேவா, சிம்ரனுடன் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்ட பல நடிகர்களும் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான வித்தியாசமான காதல் கதைக் களத்துடன் இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மூணாறு மற்றும் சென்னை பகுதிகளில் நடைபெற்று, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்தைக் கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும், சரண் வேலாயுதன் ஒளிப்பதிவுப் பணிகளையும், ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர்.
'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' மற்றும் 'வித் லவ்' ஆகிய தொடர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.