தமிழ் சினிமா

இணையத்தில் கசிந்தது ‘ஜனநாயகன்’ - விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி; டிஜிபியிடம் புகார்: முழு விவரம்

செய்திப்பிரிவு

சென்னை: ​திரைப்​படத் தணிக்கை வாரி​யத்​தின் சான்​றிதழுக்​காக காத்​திருக்​கும் நிலை​யில், விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ முழு திரைப்​பட​மும் நேற்று இணை​யத்​தில் வெளி​யாகி வைரலான​தால் விஜய் உள்​ளிட்ட படக் குழு​வினர் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்​கக் கோரி டிஜிபி​யிடம் புகார் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

தவெக தலை​வர் விஜய் நடித்​துள்ள திரைப்​படம் ‘ஜன​நாயகன்’. ஹெச்​.​வினோத் இயக்​கத்​தில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். ரூ.500 கோடி பட்​ஜெட்​டில் பிரம்​மாண்​ட​மாக தயாரிக்​கப்​பட்ட படம் என்​ப​தா​லும், தமிழகம், புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முதல்​முறை​யாக களமிறங்​கி​யுள்ள விஜய்​யின் கடைசி திரைப்​படம் என்று அறிவிக்​கப்​பட்​ட​தா​லும், ரசிகர்​கள் மத்​தி​யில் இத்​திரைப்​படம் பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யது.

          

கடந்த ஜனவரி மாதம் பொங்​கல் பண்​டிகைக்கு இப்​படம் வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், தணிக்​கைப் பிரச்​சினை காரண​மாக இது​வரை வெளி​யாக​வில்​லை. நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு, படத்தை மறு​தணிக்​கைக் குழு கடந்த மாதம் பார்த்​தது. படத்​துக்கு விரை​வில் தணிக்​கைச் சான்​றிதழ் கிடைக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்த சூழலில், ‘ஜன​நாயகன்’ படத்​தில் இடம்​பெற்​றுள்ள சுமார் 5 நிமிட வீடியோ காட்சி இணை​யத்​தில் கடந்த 9-ம் தேதி வெளி​யானது. பல்​வேறு வலை​தளங்​களி​லும் இது வேக​மாக பகிரப்​பட்​டது. இதனால், படத் தயாரிப்பு நிறு​வன​மும், படக் குழு​வினரும் அதிர்ச்​சி​யடைந்​தனர். இந்த நிலை​யில், ‘ஜன​நாயகன்’ முழு திரைப்​பட​மும் நேற்று அதி​காலை இணை​யத்​தில் சட்​ட​விரோத​மாக மர்ம நபர்​களால் வெளி​யிடப்​பட்​டது. இணை​யம் மற்​றும் வலை​தளங்​களில் இது​வும் வேக​மாக பகிரப்​பட்​டது. திரைப்படத் தணிக்கை வாரி​யத்​தின் சான்​றிதழுக்​காக காத்​திருக்​கும் சூழலில், முழு படமும் இணை​யத்​தில் வெளி​யானது விஜய் உள்ளிட்ட படக் குழு​வினருக்கு பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. விஜய் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இணையத்தில் முழு திரைப்படத்தையும் மர்ம நபர்கள் சட்ட விரோதமாக வெளியிட்டதற்கு நடிகர் சங்க பொதுச் செய​லா​ளர் விஷால், நடிகர்​கள் ரஜினிகாந்த், சூர்​யா, சிரஞ்​சீ​வி, சிவ​கார்த்​தி​கேயன், விஜய் ஆண்​டனி, ஜீவா, ஜி.​வி.பிர​காஷ் குமார், தயாரிப்​பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட திரை​யுல​கினர் பலரும் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

ரஜினிகாந்த் தனது வலைதளப் பதிவில், ‘ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சி, வேதனையை அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான ‘பெப்சி’ அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இதுபோன்ற செயல்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து, ஜனநாயகன் படத்தையும், திரைத்துறையையும் பாதுகாக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளது. திரைப்​படத்தை இணை​யத்​தில் கசி​ய​விட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி, தமிழ்த் திரைப்பட தயாரிப்​பாளர் சங்க முன்​னாள் தலைவர் கேயார், டிஜிபியிடம் புகார் கொடுத்துள்​ளார்.

சட்டப்படி நடவடிக்கை: இதற்​கிடையே, ‘ஜன​நாயகன்’ திரைப்​படக் காட்​சிகளை பகிர்ந்​தால் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தயாரிப்​பாளர் தரப்​பில் வழக்​கறிஞர் விஜயன் சுப்​பிரமணி​யன் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: ‘ஜன​நாயகன்’ படத்​தின் கசிந்த காட்​சிகள் அல்​லது காணொளியை வாட்​ஸ்​அப், டெலிகி​ராம், இன்​ஸ்​டாகி​ராம், முகநூல், எக்​ஸ், யூ-டியூப், இணை​யதளங்​கள் உள்ளிட்ட எந்த டிஜிட்டல் ஊடகம் வழி​யாக​வும் பதி​விறக்கம் செய்​வது, அனுப்​புவது, பகிர்​வது, பதிவேற்​றம் செய்​வது, மீண்​டும் பதி​விடு​வது, சேமிப்​பது, பரப்புவதுகடுமை​யான குற்​றச்​செயல் மற்​றும் பதிப்​புரிமை மீறல் ஆகும். இதில் சம்​பந்​தப்​பட்டவர்கள் மீது குற்​ற​வியல் நடவடிக்​கை எடுக்கப்படும்.

‘ஜன​நாயகன்’ படத்​தின் காட்​சிகளை சட்​ட​விரோத​மாகப் பதி​விறக்​கம்செய்து அனுப்​பிய நபருக்கு எதி​ராக எனது கட்​சிக்​காரர் ஏற்​கெனவே உரியசட்ட நடவடிக்​கை​ தொடங்கி​உள்​ளார். மேலும், இத்​தகைய சட்ட ​விரோத செயல்களில் ஈடு​பட்ட அனைத்து நபர்​களுக்​கும் எதி​ராக மேல​திக நடவடிக்​கைகள் தீவிர​மாக மேற்​கொள்​ளப்பட்டு வரு​கின்​றன. இது​போன்ற செயல்​களில் ஈடு​படும் எவரும், அதன் விளைவு​களுக்கு, உடனடி உரிமையியல் மற்​றும் குற்​ற​வியல்​ நடவடிக்​கைகளை எதிர்​கொள்ள நேரிடும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT