‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா
‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவை முன்வைத்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமன்றி விஜய்யின் நண்பர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழா தொடங்கப்பட்ட உடனே விழா அரங்கில் இருந்து பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் பகிரப்பட்டது.
இந்த புகைப்படங்கள் வைரலாவதை முன்வைத்து, போலியாக ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படங்களும் வெளியானது. இதையும் பலர் உண்மை என நினைத்து பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பின்பு பலரும் இது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்று தெரிவித்து நீக்கச் சொன்னார்கள்.
அப்புகைப்படங்கள் அனைத்துமே பார்ப்பதற்கு நிஜம் போலவே இருந்ததால் பலரும் அவை உண்மை என நம்பத் தொடங்கியதால் இப்பிரச்சினை உருவானது. சில திரையுலக பிரபலங்களும் அப்புகைப்படங்களை உண்மை என நினைத்து தங்களுடைய சமூகவலைதளத்தில் பகிர்ந்ததை காண முடிந்தது. சில மணித்துளிகளில் படக்குழுவினர், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டவை விழா மேடைகளில் இருந்து நிஜமான புகைப்படங்களை வெளியிடத் தொடங்கினார்கள். பின்பு ஏஐ தொழில்நுட்ப புகைப்படங்களைப் பகிர்வது குறையத் தொடங்கியது.