விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். விஜய்யின் கடைசிப்படமான இதில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்ளனர்.
கே.வி.என்.புரொடக் ஷன்ஸ் தயாரித்த இப்படத்தை ஜன.9-ம் ரிலீஸ் செய்ய போவதாக அறிவித்திருந்தனர். படத்தில் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, படத்தை மறுஆய்வுக்கு அனுப்பி மத்திய தணிக்கை வாரியம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து படக்குழு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அதை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.
மேலும், இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்புக்குழு மீண்டும் தனி நீதிபதியை நாடவும், தனி நீதிபதி இருதரப்புக்கும் போதிய அவகாசம் அளித்து விசாரிக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில் இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது தொடர்பாக நேரடியாகத் தணிக்கை வாரியத்தையே நாடவுள்ளதால், நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக படத்தயாரிப்பு குழு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர் மார்ச் 9-ம் தேதி மறு ஆய்வுக்குழுவினர் ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்ப்பதாக இருந்தது. அன்று மறு ஆய்வுக்குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாததால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மார்ச் 17-ம் தேதி மறு ஆய்வுக்குழுவினர் பார்ப்பதாகக் கூறப்பட்டது. அதன்படி படத்தை நேற்று முன் தினம் பார்த்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிகள் நடைமுறையில் இருப்பதாலும் படத்தில் அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாலும் இப்படத்தைத் தேர்தல் ஆணையத்துக்கு மறு ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் படத்தைப் பார்த்த பின்னரே தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.