தமிழ் சினிமா

ஜன​நாயகன் பட ‘லீக்’ விவகாரம்: “எடிட்​டரை குறை சொல்ல வேண்​டாம்” - ‘பெப்​சி’ தலை​வர் வேண்​டு​கோள்

செய்திப்பிரிவு

விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ முழுப் படமும் இணை​யத்​தில் கசிந்​திருப்​பது திரை​யுல​கினரை அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது. இதற்கு நடிகர், நடிகைகள் கடும் கண்​டனத்​தைத் தெரி​வித்​துள்​ளனர். லீக் ஆன படத்​தில் ‘எடிட்​டர் பைல்’ என்று வாட்​டர் மார்க் இருப்​ப​தால், படத்​தொகுப்​பாளரிடம் இருந்​து​தான் இது லீக் ஆகி​யிருக்​கும் என்று கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில் பெப்சி தலை​வர் ஆர்​.கே.செல்​வ​மணி தலைமையில் படத்​தொகுப்​பாளர் சங்​கத்​தினர் செய்தியாளர்களை நேற்று சந்​தித்​தனர். படத்​தொகுப்​பாளர் சங்​கத் தலை​வர் கோபி பேசும்​போது, “ஜன​நாயகன் திரைப்​படம் இணை​யத்​தில் கசிந்​த​தில் எங்​கள் வருத்​தம் மிகப்​பெரியது. எங்கள் முதலீடே எங்​கள் மேல் உள்ள நம்​பிக்​கை​தான்.

          

அதை வைத்​து​தான் எங்​களுக்​கான தொழில் வாய்ப்​பு​களே கிடைக்​கும். ஜனநாயகன் படத்​தின் எடிட்​டர் பிரதீப் ராகவ். அவர் 25 படங்​களுக்கு மேல் பணி​யாற்றி இருக்​கிறார். இந்​தப் படத்​துக்கு ஏன் இப்​படி நடந்​தது என்​பது எல்​லோருக்​குமே அதிர்ச்​சி​யான விஷயம்​தான்.

அந்​தப் படத்​துக்​குத் தணிக்கை தள்​ளிப்​போய்க் கொண்டே இருக்​கும்​போது, படத்​தின் கிராபிக்ஸ் காட்​சிகளை மேம்​படுத்​தலாம் என இயக்​குநர் நினைத்தார். அப்​படி நினைப்​பது இயற்​கை​தான். சென்​னை​யில் உள்ள ஸ்டூடியோ​வில் இருந்து அந்த ஷாட்​களை வாங்​கி, காட்​சிகளை மேம்​படுத்தி விட்​டு, ஐதரா​பாத்​தில் உள்ள அன்​னபூர்ணா ஸ்டூடியோ​வில் ஒலி கலவைப் பணி​களுக்​காகப் படத்தயாரிப்​பாளர் மற்​றும் இயக்​குநருக்​குத் தெரிந்து அனுப்​பப்​பட்​டது. அந்த வீடியோ​தான் இணை​யத்​தில் கசிந்​திருக்​கிறது. இதைப் படத்​தின் எடிட்​டர்​தான் கசி​ய​விட்​டார் என்று கூறுகிறார்​கள். அவருக்​கும் இதற்​கும் சம்​மந்​தமில்​லை.

‘வாட்​டர் மார்க்’ இல்​லாத புட்​டேஜ் அவரிடம் இருக்​கும்​போது, ‘வாட்டர் மார்க்’ உள்ள புட்​டேஜை அவர் ஏன் வெளியிட வேண்​டும்? அப்​படி வெளியிட்டு அவர் பெயரை கெடுக்க நினைப்​பா​ரா? இதற்கு பின்​னால் என்ன அரசி​யல் இருக்​கிறது என்​பது எங்​களுக்​குத் தெரி​யாது. எந்த எடிட்​டருக்​கும் ஒரு பெரிய நடிகரின் படத்​தில் பணி​யாற்ற வேண்​டும் என்ற ஆசை இருக்​கும். இந்த நிலை​யில் அவர் எப்​படி அதை வெளி​யிட்டு தன் பிழைப்பை கெடுத்​துக்​கொள்ள முடி​யும்? அதனால் எடிட்​டர் மீது தேவை​யில்லாமல் குற்றம் சொல்ல வேண்​டாம்” என்​றார்.

பெப்சி தலை​வர் ஆர்​.கே.செல்​வ​மணி கூறும்​போது, “ஜன​நாயகன் திரைப் படக் கசிவு, எல்​லோருக்​கும் பயத்தை ஏற்​படுத்தி இருக்​கிறது. இணைய திருட்டை அரசே தடுக்க முடி​யாத​போது நாங்​கள் அதற்​குப் பலி​யாகி விடு​வோமோ என்ற பயம் படத்​தொகுப்​பாளர்​கள் எல்​லோருக்​கும் ஏற்​பட்​டிருக்​கிறது. இதைப் பயன்​படுத்​தி, எப்​படி முறைப்​படுத்​து​வது என்​ப​து குறித்து படத்​தொகுப்​பாளர்​கள் ஒரு யோசனையை கொண்டு வந்​திருக்​கிறார்​கள். தயாரிப்​பாளர் சங்​கத்​துடன் பேசி, இனி இது​போன்று நடக்​காமல் இருக்க முடி​வெடுப்​போம். இந்த விஷ​யத்​தில் எடிட்​டரை தேவை​யில்​லாமல் குற்​றம் சொல்ல வேண்​டாம்.

படத்​தின் காப்​பியை யார், யாருக்கு அனுப்​பினோம், யாரெல்​லாம் சம்​மந்​தப்​பட்​டார்​கள் என்ற விவரம் போலீ​ஸாரிடம் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அவர்​கள் சரி​யான திசை​யில் வி​சா​ரித்து வருகிறார்கள் குற்​ற​வாளியை​ நிச்​ச​யம்​ கைது செய்​வார்​கள்​” என்றார்.

SCROLL FOR NEXT