இந்தியாவின் சிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கைக் கதை, ‘ஜி.டி.என்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. ‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடித்துள்ளார்.
சத்ய ராஜ், ஜெய ராம், பிரியா மணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிருஷ்ண குமார் ராம் குமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் மூலன், வர்கீஸ் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர்.மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் வெளியிடப்பட்டது. படக் குழுவினர் கலந்துகொண்டனர்.
ஆர்.மாதவன் கூறும்போது, ”ஜி.டி.நாயுடு, கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட மேதை. அசாதாரண சாதனையாளர். அவர் பன்முகத் திறமைகளைக் கொண்டவராக விளங்கினார். பல துறைகளில் அவரது பங்களிப்பு அளப்பரியது.
ஆனால், அவரது ஆட்டோமொபைல் மீதான பேரார்வத்தை மட்டுமே நாம் கொண்டாடுகிறோம். அவரது வாழ்க்கை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அறியப்பட வேண்டியது அவசியம். அதுவே இந்த திரைப்படத்தை உருவாக்க எங்களுக்கு ஊக்கமாக அமைந்தது” என்றார்.