கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘காளிதாஸ் 2’ திரைப்படம், இந்த ஆண்டின் தரமான திரில்லர் படங்களில் ஒன்றாக விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றிருந்தது. திரையரங்க வசூலிலும் குறை வைக்கவில்லை. அந்தப் படம் தற்போது உலகப் பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாக்களில் ஒன்றான 28வது ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் (SIFF - 2026) அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டு ஏழு இந்தியப் படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் தென்னிந்தியாவிலிருந்து தேர்வுபெற்ற ஒரே திரைப்படம் ‘காளிதாஸ் 2’.
‘காளிதாஸ்’ படத்தின் முதல், இரண்டாம் பாகங்களை ஸ்ரீசெந்தில் இயக்கியிருந்தார். அரவிந்த் ஆனந்த் கூடுதல் திரைக்கதை எழுதியிருந்தார். பரத், அஜய் கார்த்தி, சங்கீதா, பவானி, அபர்ணதி உள்ளிட்ட பலர் முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்த ‘காளிதாஸ் 2’ படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஃபைவ் ஸ்டார் செந்தில் - என்.யோகேஸ்வரன் இணைந்து தயாரித்திருந்தனர்.