சென்னை: ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் 3-ம் பாகத்தை 4 வார காலத்துக்கு வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி இதன் 2-ம் பாகத்தின் இணை தயாரிப்பாளரான ஏ.விஜயசுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரவிந்த் கோஷ், எஸ்.கே.கண்ணதாசன் ஆகியோர் தமது வாதத்தில் கூறியது: “ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் மனுதாரர் 2023-ம் ஆண்டு அஜய் ஞானமுத்துவுடன் இணைந்து, ‘டிமான்ட்டி காலனி’ 2-ம் பாகத்தை தயாரித்தார்.
அப்போது செய்த ஒப்பந்தத்தின்படி எதிர்காலத்தில் டிமான்ட்டி காலனி என்ற பெயரைப் பயன்படுத்தி எடுக்கப்படும் அனைத்து பாகங்களையும் மனுதாரருடன் இணைந்தே தயாரிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால், தற்போது மனுதாரரி்ன் அனுமதியின்றி ‘டிமான்ட்டி காலனி’ 3-ம் பாகத்தை ஃபேஷன் பிலிம் பேக்டரி நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து தயாரித்து, அதை ஓடிடி தளத்துக்கு ரூ.17 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். திரையரங்குகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
இது சட்டவிரோதமானது. இதுதொடர்பாக சமரச தீர்ப்பாயத்தையும் அணுகியுள்ளோம். எனவே, இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று அவர்கள் வாதிட்டனர்.
இது தொடர்பாக இயக்குநர் அஜய் ஞானமுத்து, ஃபேஷன் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தார். அதுவரை படத்தை வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.