ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘ஹைக்கூ’. விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்துள்ள இப்படம் நேற்று வெளியானது.
யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ளார். இப்படம் தென்னிந்தியா முழுவதும் 450-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே திட்டமிருந்த திரையரங்குகளின் எண்ணிக்கையை விட இது அதிகம் என படக்குழு தெரிவித்துள்ளது.
படம் பற்றி இயக்குநர் யுவராஜ் சின்னசாமி கூறும்போது, “ஹைக்கூ’ படத்தை உருவாக்கும்போது, எல்லா வயதினரையும் கவரக்கூடிய காதல் கதையைச் சொல்ல வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. காதல் கதைகளுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்கும்.
ஆனால், அனைவரையும் கவரும் காதல் கதைகள், ஒவ்வொருவரும் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய உணர்வுகளைக் கொண்டிருக்கும். அப்படித்தான் இதை உருவாக்கினேன். ஒரு பெண்ணின் காதலைப் பெற முயற்சிக்கும் காதலன் என்ற எல்லைக்குள் மட்டும் ஏகன் கதாபாத்திரம் நின்றுவிடுவதில்லை.
எதிர்பாராத விதமாக அவர் செய்யும் செயல், அவரது வாழ்க்கையையே மாற்றுகிறது. பிறகு அவர் எதிர்கொள்ளும் உணர்வுப் பூர்வமான போராட்டங்கள் கதாபாத்திரத்துக்கு மற்றொரு பரிமாணத்தை அளிக்கின்றன. ஏகன் கதாபாத்திரத்துடன் ரசிகர்கள் தங்களைப் பொருத்திப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.