தமிழ் சினிமா

‘‘நள்ளிரவு 1 மணிக்கு அழைத்து அஜித் பாராட்டினார்’’ - ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

ப்ரியா

நடிகர் அஜித்குமார் நள்ளிரவு 1 மணிக்கு அழைத்து தனது இசை குறித்து பாராட்டியதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், அஜித் குமாரின் கார் ரேஸ் பற்றிய ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப் படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து  கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘இது ஒரு வித்தியாசமான பணி. இது ஓர் ஆவணப் படம். இந்தப் படத்துக்காக வேலை செய்து கொண்டிருந்தபோது எனக்கு திடீரென ஒரு அழைப்பு வந்தது, அஜித் தான் பேசினார். ‘ஜி.வி., நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ட்ரெய்லர் இசையை நான் மிகவும் ரசித்தேன். படத்தின் இசையும் எனக்கு பிடித்திருக்கிறது. நீங்கள் எல்லோரும் இவ்வளவு ஆர்வத்துடன் பணியாற்றுகிறீர்கள். நான் உங்களைப் பெருமைப்படுத்துவேன்’ என்று கூறினார். அப்போது நள்ளிரவு 1 மணி இருக்கும். அது எனக்கு அவ்வளவு உத்வேகமாக  இருந்தது. உடனே நான் உற்சாகமாகி விட்டேன்.

இந்தப் படத்தில் வேலை செய்தது ஒரு வித்தியாசமான அனுபவம். இந்த ஆவணப் படம் அஜித் வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதியை பதிவு செய்கிறது. அதற்கு நான் இசை அமைக்கிறேன் என்பது எனக்கு ஒரு பொறுப்புமிக்க பணி.

இது வெறும் படம் மட்டும் இல்லை. இது அஜித்தின் நிஜம். அவர் யார், என்ன யோசிக்கிறார், இந்த விஷயத்தை சர்வதேச அளவில் கொண்டு போக எவ்வளவு முயற்சிக்கிறார். இதற்காக எவ்வளவு உழைக்கிறார் என்பது படத்தில் தெரியும். இந்த ஆவணப் படம் காலம் தாண்டியும் நிற்கும்’’ என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.

நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமாரின் கார் ரேஸிங் முயற்சிகளைச் சொல்லும் ஆவணப் படம் ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் பெயரில் தயாராகி வருகிறது. இந்த ஆவணப் படத்தை ‘தெய்வத்திருமகள்’, ‘மதராசப்பட்டிணம்’ படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.

இந்த ஆவணப் படத்தை அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி ‘கோல்டன் ட்ராபி ஃபிலிம் புரொடக்‌ஷன்’ கீழ் தயாரிக்கிறார். இந்த ஆவணப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

இதில் வீடியோகிராபர் நியோல் கெம்மன், ஒளிப்பதிவாளர்கள் ரிப்ஹு சர்மா, கபிலன் விநாயக், படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோரும் பணியாற்றி உள்ளனர்.

SCROLL FOR NEXT