“விலை கொடுக்க முடியாத பல விஷயங்கள் இங்க இருக்கு!” - இயக்குநர் சஜீவ் பழூர் நேர்காணல்

“விலை கொடுக்க முடியாத பல விஷயங்கள் இங்க இருக்கு!” - இயக்குநர் சஜீவ் பழூர் நேர்காணல்
Updated on
2 min read

பிரபல மலையாள திரை எழுத்தாள ரான சஜீவ் பழூர், இயக்குநராக அறிமுகமாகும் தமிழ்த் திரைப்படம், ‘என்ன விலை’. இயக்குநர் ஷாஜி என்.கருணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர், சில படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக் ஷியும்’ என்ற படத்துக்காக சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்காகத் தேசிய விருது பெற்றவர். செப்.17-ல் வெளியாக இருக்கும் ‘என்ன விலை’ பற்றி சஜீவ் பழூரிடம் பேசினோம்.

Q

தமிழில் இயக்குநராக அறிமுகமா வது ஏன்?

A

இயக்குநர்கள் ஷாஜி என்.கருண், லெனின் ராஜேந்திரன் ஆகியோர்ட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். பிறகு ஷாஜி சார் இயக்கிய ‘ஸ்வப்பனம்’ங்கற படத்துக்கு திரைக்கதை எழுதினேன். அப்புறம் கிட்டத்தட்ட 100 ஆவணப் படங்கள், அதிகமான குறும்படங்கள் பண்ணியிருக்கேன்.

அந்தக் காலகட்டத்துல என்னை ரொம்ப ஈர்த்தது தமிழ் சினிமா. அப்ப நான் பார்த்த, ‘பண்ணையாரும் பத்மினியும்', ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', ‘சூது கவ்வும்', ‘முண்டாசுப் பட்டி' மாதிரி வித்தியாசமான கருக்களை வச்சு தமிழ்ல வெளியான படங்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தது.

ஒரு சின்ன விஷயத்தை வச்சுகிட்டு அழகா படம் பண்ண முடியும்ங்கற நம்பிக்கையைத் தந்தது இந்தப் படங்கள். அப்படித் தான் ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக் ஷியும்’ படத்தோட கதையை எழுதினேன். அது வரவேற்பைப் பெற்றதும் இயக்குநரா அறிமுகமானா தமிழ்லதான் ஆகணும்னு முடிவு பண்ணினேன். அப்படித்தான் தமிழுக்கு வந்தேன்.

Q

ராமேசுவரம் பின்னணியில் நடக்கிற படம்னு சொன்னாங்களே?

A

திலீப் நடிச்ச ‘கேஷு ஈ வீடிண்டே நாதன்’ங்கற மலையாள காமெடி படத்துக்கு நான்தான் ஸ்கிரிப்ட் எழுதினேன். அதோட கிளைமாக்ஸ் ஷூட்டிங் ராமேசுவரம் அக்னி தீர்த்தத்துல நடந்தப்பதான் ‘என்ன விலை?’க்கான கதை உருவாச்சு. அதுக்கு நிறைய ஆய்வு பண்ண வேண்டியிருந்தது. 3 வருஷம் ஆய்வு பண்ணி திரைக்கதை எழுதினேன். இது மீனவர் சமூகத்துப் பின்னணியில் நடக்கிற கதை.

Q

என்ன மாதிரியான கதை?

A

‘என்ன விலை’ங்கறது நம்ம அன்றாடம் கேட்குற சாதாரண வார்த்தைதான். வெங்காயம் என்ன விலைனு கேட்டா, ஒரு கிலோ இவ்வளவுனு சொல்ல முடியும். விலை கொடுக்க முடியாத சில விஷயங்கள் இங்க இருக்கு. அதுக்கு விலையே கிடையாது. அன்பு, பாசம், தியாகம், சுயமரியாதை இதற்கெல்லாம் விலை சொல்ல முடியுமா?

அந்த மாதிரி விலை மதிப்பற்ற விஷயங்களை மையமாகக் கொண்டு, ஒரு மீனவ சமூகப் பின்னணியில் நடக்கும் குடும்பக் கதைதான் இது. என்ன விலைங்கற சாதாரண ஒரு கேள்வியில பல பரிமாணங்கள் இருக்கு. அதை இந்தப் படம் சொல்லும். இதுல ஒரு முக்கிய நீதிமன்ற விவாதமும் இருக்கு. படம் வெளியான பிறகு இதைபற்றிய விவாதம் நடக்கும்னு நம்பறேன். எல்லோரையும் இந்தப் படம் கனெக்ட் பண்ணும்.

Q

கருணாஸை இந்த கதாபாத்திரத்துக்கு எப்படி தேர்வு செஞ்சீங்க?

A

கதை எழுதி முடிச்சதும் எனக்கு சிறந்த ‘பெர்ஃபார்மர்' தேவைப் பட்டார். கருணாஸின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த கதையின் கதாபாத்திரத்துக்கு அவர் ரொம்ப பொருத்தமா இருந்தார். ஒரு கிராமத்து மனிதரோட இயல்பை, மேனரிசத்தை அழகா கொண்டு வந்திருக்கார்.

சிறந்த நடிப்பை கொடுத்திருக்கார். படம் பார்க்கும்போது நான் சொன்னது புரியும். அவரோட மனைவியா ‘பாலம்மா'ங்கற கதாபாத்திரத்துல விஜி வீரமணி நடிச்சிருக்காங்க. மகனா ‘டூரிஸ்ட் பேமிலி’ கமலேஷ், வழக்கறிஞரா நிமிஷா சஜயன் நடிச்சிருக்காங்க. தயாரிப்பாளர் ஜிதேஷ் என் நண்பர்தான். அவர் ஒரு படம் பண்ணணும்னு நினைச்சுட்டிருந்தார். இந்தக் கதையை கேட்டதும் தயாரிக்கிறேன்னு முன்வந்தார். சாம் சிஎஸ் இசை அமைச்சிருக்கிறார்.

Q

சில திரைப்பட விழாக்கள்ல இந்தப் படம் விருது வாங்கியிருக்குதே ?

A

இந்தப் படத்துல சொல்ற விஷயம், புதுசா இருக்கும். இப்படத்துல வர்ற மாதிரியான ஒரு வழக்கு இதுவரை வந்ததில்லை. அது நியாயமானதுங்கூட. அந்த ‘கான்செப்ட்டு’க்காக பட விழாக்களுக்கு அனுப்பினோம். நான்கைந்து விருதுகள் கிடைச்சிருக்கு. மக்களுக்கும் இந்தப் படம் ரொம்ப பிடிக்கும்னு நம்பறேன்.

Q

படப்பிடிப்பு நடந்த ஊர்லயே ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டீங்களே ஏன்?

A

மீனவ கிராமத்துல படப்பிடிப்பு நடத்தணும்னு நினைக்கும்போது முதல்ல பயம் இருந்தது. ஏதும் பிரச்சினை வருமா? அவங்க உதவி பண்ணுவாங்களா?ன்னு சந்தேகம் இருந்தது. அதனால 15 நாளுக்கு முன்னாலயே அங்க போயி, அவங்களோட பழகி செட் போட்டு படப்பிடிப்பை நடத்தினோம். நீங்க நம்பவே மாட்டீங்க, இவ்வளவு அன்பான மக்கள் இருப்பாங்களா?ன்னு ஆச்சரியப்படற மாதிரி எல்லோரும் நடந்துகிட்டாங்க.

எல்லா விதத்துலயும் உதவி பண்ணினாங்க. ஒவ்வொரு வீடும் உறவினர் வீடு மாதிரி ஆயிடுச்சு. அதனால அவங்களுக்கு ஏதாவது பண்ணணும்னு முடிவு பண்ணினோம். அதனால, ஒரு நாள் பூராவும் பெரிய கொண்டாட்டமா அங்க விழா நடத்தினோம். மக்களுக்கு பிரியாணி போட்டு, அவங்களை வச்சே ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டோம். இது அவங்க அன்புக்கு நாங்க செய்ற மரியாதை. பட ரிலீஸுக்கு பிறகும் அங்க போகணும்னு இருக்கோம்.

“விலை கொடுக்க முடியாத பல விஷயங்கள் இங்க இருக்கு!” - இயக்குநர் சஜீவ் பழூர் நேர்காணல்
‘Hi’ விமர்சனம்: கவின் - நயன்தாராவின் மனதை வருடும் காதல் கதை எப்படி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in