தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’, ‘தாய்க்கிழவி’ உள்பட சில படங்களைத் தயாரித்துள்ளார். அடுத்து, அம்மாமுத்து சூர்யா இயக்கும் படத்தைத் தயாரிக்க இருக்கிறார்.
இதற்கிடையே அவரது தயாரிப்பு நிறுவனப் பெயரைப் பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அது தொடர்பான வாட்ஸப் மெசேஜ்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “எங்கள் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கான நடிகர் தேர்வு தொடர்பாக இயக்குநர்களோ, ஒருங்கிணைப்பாளர்களோ, காஸ்டிங் ஏஜென்ட்களோ அல்லது மூன்றாம் தரப்பு பிரதிநிதிகளோ நியமிக்கப்படவில்லை. எங்கள் நிறுவனம் சார்பான அதிகாரப்பூர்வமான நடிகர்/நடிகை தேர்வு அறிவிப்புகள் அல்லது தகவல்கள் எங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்.
இதற்கு மாறாக வரும் வாட்ஸ்அப் செய்திகள், மின்னஞ்சல்கள், அழைப்புகள் அல்லது சமூக வலைதளப் பதிவுகளை நம்ப வேண்டாம். சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் பெயரைத் தவறாகப் பயன்படுத்து பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.