லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிறைக்குச் சென்று திரும்பிய பிறகு எம்.கே.தியாகராஜ பாகவதர், தனது நரேந்திரா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து நடித்த படம், ‘ராஜமுக்தி’. இதில் வி.என்.ஜானகி, பி.பானுமதி, எம்.ஜி.சக்கரபாணி என பலர் நடித்தனர். எம்.ஜி.ஆர், சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
1948-ல் வெளியான இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தென்னிந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான பாகவதருக்கு இது பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. அவர் குரலில் மயங்கிக் கிடந்த ரசிகர்கள், இப்படி ஒரேயடியாக ஆதரவு தராமல் போனதை அவர் எதிர்பார்க்கவில்லை.
பிறகு, எஃப்.நாகூர் தயாரித்து இயக்கிய ‘அமரகவி’ படத்தில் டி.ஆர்.ராஜகுமாரியுடன் நடித்தார் பாகவதர். 1952-ல் வெளியான இப்படமும் பெரும் வெற்றியை எட்டவில்லை. அடுத்து பி.ஏ.சுப்பாராவ் இயக்கத்தில் அவர் நடித்த ‘சியாமளா’வும் கைகொடுக்கவில்லை. இதனால் ‘புது வாழ்வு’ என்ற படத்தை தயாரித்து தானே இயக்கி, நடித்தார்.
சிறை வாழ்க்கை தந்திருந்த நெகட்டிவ் இமேஜை மாற்றி தனக்கு புது வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்படத்தை ஏராளமான பொருட்செலவில் கடன் வாங்கி உருவாக்கினார், பாகவதர்.
இதில், மாதுரி தேவி, பி.பி.ரங்காச்சாரி, லலிதா, குமாரி துளசி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.எஸ்.பாலையா, துரைராஜ், அம்பிகா, ‘ஆழ்வார்’ குப்புசாமி, கே.என். கமலம், கே.ஏ.தங்கவேலு, ‘குலதெய்வம்’ ராஜகோபால், எஸ்.ஆர்.கோபால், டி.பி.பொன்னு சாமி பிள்ளை, டி.வி.கல்யாணி அம்மாள் என பலர் நடித்தனர்.
கிராமத்து இளைஞனான வைகுண்டம் (பாகவதர்) நல்ல பாடகன். அவனுக்கு அங்குள்ள நாகம்மாள் (லலிதா) மீது காதல் வருகிறது. வழக்கம்போல காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாகம்மாளின் சகோதரர், வைகுண்டத்தை மரத்தில் கட்டி வைக்கிறார்.
அவ்வழியே வரும் பணக்காரப் பெண்ணான சுபா (மாதுரி தேவி) வைகுண்டத்தைக் காப்பாற்றி, தனது நகரத்துக்கு அழைத்துச் செல்கிறாள். அவரின் பெயரை மாற்றி சிறந்த பாடகராக்குகிறார்.
புகழும் வசதியும் கிடைத்தப் பிறகு பெற்றோரைப் புறக்கணித்து, அவர்களைத் தவறாக நடத்துகிறார் வைகுண்டம். காதலி நாகம்மாள் அவரது நடத்தையால் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். பிறகு தவறை உணர்ந்து வைகுண்டம் எப்படித்திருந்துகிறார் என்பது கதை.
இதன் கதை, வசனத்தை எழுதியவர் இளங்கோவன். அவருடன் ஏ.கே.வேலன், இறைமுடி மணி, சுரதா ஆகியோரும் இணைந்து எழுதினர். நியூடோன் ஸ்டூடியோவில் படமான இதற்குப் பாகவதரின் சகோதரர் எம்.கே.சண்முகம் தயாரிப்புப் பொறுப்பிலிருந்தார். ஆர்.சம்பத் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜி.ராமநாதனும் சி.என்.பாண்டுரங்கனும் இசை அமைத்தனர்.
பாபநாசம் சிவன், தஞ்சை ராமையா தாஸ், ஏ.மருதகாசி, நடராஜ சுந்தரம், சரவணபவானந்தா, சுரதா பாடல்களை எழுதினர். 18-க்கும் மேற்பட்ட பாடல்கள் படத்தில் இடம்பெற்றன.
வழக்கம்போல தியாகராஜ பாகவதரே பெரும்பாலான பாடல்களைப் பாடினார். பாரதியாரின் ‘சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா’ என்ற பாடலை மென்மையான குரலில் மெல்லிசையாகப் பாடினார். இது உள்பட பல பாடல்கள் அப்போது ஹிட்டாயின. என்.எஸ்.கிருஷ்ணனும் மதுரமும் ஒரு நகைச்சுவை டூயட் பாடலைப் பாடினர்.
அதிகப் பாடல்களே முக்கியம் என்ற நிலையில் இருந்து திரைப்படங்கள் மாறிக் கொண்டிருந்த காலத்தில் பாகவதர் இந்தப் படத்திலும், நின்றால் பாடல், நடந்தால் பாடல் என்று வைத்திருந்தது விமர்சிக்கப்பட்டது. அவர் நடித்த ‘ஹரிதாஸ்’ கதையையை கொஞ்சம் உல்டாவாக்கி இப்படத்தை எடுத்ததாகவும் கூறப்பட்டது.
பணக்கார ஹீரோ, தாய், தந்தையை மதிக்காமல் மனம் போன போக்கில் கேளிக்கைகளில் ஈடுபட்டு, இறுதியில் பெற்றோரே தெய்வம் என திருந்திப் பாடி போற்றுவது ‘ஹரிதாஸ்’.
ஏழையாக இருந்து பணக்காரராகும் ஹீரோ, தாய், தந்தையை அவமதிக்கிறார். பின்னர் திருந்தி அவர்களைத் தெய்வமாக நினைத்து பாடி, அவர்கள் ஆசியுடன் காதலியைக் கைப்பிடிப்பது ‘புது வாழ்வு’ என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இதன் பாடல்கள் ஹிட்டான அளவுக்குப் படம் ஓடவில்லை. அதற்கு, டைரக்ஷன் பற்றிய அனுபவம் இல்லாத பாகவதர் இயக்கியதுதான் காரணம் என்றார்கள். சிறைக்குச் சென்று திரும்பிய பிறகு பாகவதர் தயாரித்த, நடித்த எந்தப் படமும் அவர் இமேஜை உயர்த்தவில்லை என்பது சோகம்.
‘புது வாழ்வு’ திரைப்படம் 1957-ம் ஆண்டு இதே நாளில் சில திரையரங்குகளில் வெளியானது. பின்னர் மார்ச் 22-ல் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் ஆனது. இன்றோடு 69 வருடங்களைக் கடந்துவிட்டது ‘புது வாழ்வு’. இப்படத்துக்கு பிறகு நடித்த ‘சிவகாமி’, பாகவதருக்கு கடைசி படமாக அமைந்து விட்டது.
கட்டுரையாளர் தொடர்புக்கு: egnathraj.c@hindutamil.co.in