‘மாத்தி யோசி’, ‘தொட்டால் தொடரும்’, ‘அழகு குட்டி செல்லம்’, ‘புகைப்படம்’ உள்பட மனதில் தங்கிய பலத் தமிழ்த் திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்.
இன்றைய டிஜிட்டல் ஒளிப்பதிவுத் துறையில் அறிமுகமாகும் புதிய ஒளிப்பதிவுத் தொழில்நுட்ப வசதிகளைத் தெரிந்துகொள்ள, பெரிய ஆளுமைகள் முதல் சினிமா பயிலும் மாணவர்கள்வரை தேடுவது இவரைத்தான்.
அவர் தற்போது இயக்குநராகத் தனது எல்லையை விரித்திருக்கிறார். படத்தின் பெயர் ‘வன மடி’. முற்றிலும் அறிமுகக் கலைஞர்களும் கதை நிகழுமிடத்தில் வாழும் மக்களும் நடித்துள்ள அப்படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.
தேர்ந்தெடுத்த சங்கத் தமிழ் செய்யுள்களுக்கு இசையமைத்துக் கவனிக்க வைத்த ராலே ராஜன்தான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இதுவரை 7 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் போட்டிப் பிரிவுக்கு அதிகாரபூர்வமாக இது தேர்வானதுடன் அவற்றில் 4 வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளையும் வென்றுள்ளது.
விஜய் ஆம்ஸ்ட்ராங்
படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது: “மனிதர்கள் தங்கள் அன்பையும் தேடுதலையும் இயந்திர வாழ்க்கைக்குள் தொலைத்துவிட்டதைப் பேசும் கதை. தேசிய விருதுபெற்ற ஆளுமை எடிட்டர் பி.லெனின் இப்படத்தைப் பார்த்தபின் ‘என்னுடைய தந்தை பீம்சிங்கின் புத்தா பிக்சர்ஸ் பேனரில் ரிலீஸ் செய்கிறேன்’ என்றார்.
அதை ‘வன மடி’க்குக் கிடைத்திருக்கும் சிறந்த விருதாகக் கருதுகிறேன்” என்கிறார் விஜய் ஆம்ஸ்ட்ராங். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.