சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, பரிதாபங்கள் டிராவிட் செல்வம், குரேஷி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’. ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஹரி எஸ்.ஆர்.இசை அமைத்துள்ளார். ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ‘பன் பட்டர் ஜாம்’ மூலம் கவனம் பெற்ற ஆர்.ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். அக்.16- ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகை அஞ்சலி நாயர் பேசும்போது, “இந்தப் படத்தின் மூலம் புதிதாக ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். ‘டிரோன்ஸ்’ திரைப்படம் ஃபேன்டஸி, ஹாரர் மற்றும் சர்வைவல் அம்சங்கள் கொண்ட படமாக இருக்கும். இதில் பல விசித்திரமான சம்பவங்கள் நடைபெறும். அதேநேரம், ரசிகர்களை மகிழ்விக்கும் பல பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
நிற அரசியல், நிறவெறி மற்றும் காதல் சார்ந்த சில தீவிரமான, சர்ச்சைக்குரிய விஷயங்களையும் இப்படம் தொட்டுச் செல்கிறது. இதுபோன்ற புதிய கருத்துகளைக் கொண்ட, வழக்கமான சினிமா பாணியை உடைக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து தமிழில் வெளியாக வேண்டும்” என்றார்.
நடிகை சித்தி இத்னானி பேசும்போது, “இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. அஞ்சலியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இரண்டு நடிகைகள் நல்ல நண்பர்களாக இருக்க முடியும் என்பதற்கும் எங்கள் நட்பு ஓர் உதாரணம். சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது சிறப்பு” என்றார்.