

சென்னை: திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிலம்பரசன் டிஆர் வெளியிட்டுள்ளார். நானி இயக்கத்தில், அமுதா லியோனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 23 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அம்மா – மகன் பாசத்துடன் தொடங்கும் ட்ரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளில் திருப்பங்களுடன் நகர்கிறது. சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ஏழு பேரின் பின்னணியில், அவர்களிடம் எதிர்பாராமல் சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, அவன் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன என்பதை இப்படம் பேசுகிறது. குடும்ப உணர்வுகள், காதல், ஆக்ஷன், நகைச்சுவை என அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான திரைப்படமாக இது இருக்கும் என படக்குழு தெரிவிக்கிறது.
இப்படத்தில் லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், துஷ்யந்த் மற்றும் உதயா தீப் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
இப்படத்துக்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார். அசோக்குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.வசந்தகுமார் படத்தொகுப்புப் பணிகளை கவனித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிலம்பரசன் டிஆர் வெளியிட்டுள்ளார்.